பாவனா, ரஹ்மான், ஷெபின் பென்சன் , விஷ்ணு அகஸ்தியா, பினு பப்பு, அர்ஜுன் லால் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், அனோமி. இந்தப் படத்தை ரியாஸ் மராத் எழுதி இயக்கியுள்ளார். சுஜித்சாரங் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர். பின்னணி இசை ஃபசல் ஏ பேக்கர்.
கார் விபத்து ஒன்றில் பாவனாவும் அவரது தம்பி ஷெபின் பென்சனும் பெற்றோரை இழக்கின்றனர். பாவானா தனது தம்பியை, அம்மாவாகவும், அப்பாவாகவும் இருந்து கவனித்து வருகிறார். விபத்தின் காரணமாக ஷெபின் பென்சன் மனநிலை ஆலோசனை பெற்று வருவதோடு அதற்கான சிகிச்சையையும் பெற்று வருகிறார். பாவனா காவல் துறையில் தடயவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பாவனா வசிக்கும் பகுதியில் ஒரு மர்ம மரணம் நிகழ்கிறது. அதை இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, அதை தற்கொலை என முடிவு செய்கிறது. தடயவியல் நிபுணரான பாவனாவுக்கு அது கொலையாக இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. அது குறித்து ஆராய்ச்சியும் செய்து வருகிறார். இந்த மர்ம மரணம் நிகழ்ந்த ஒரு சில தினங்களிலேயே, பாவனாவின் தம்பியும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இன்ஸ்பெக்டர் ரகுமான் இந்த மரணத்தையும் தற்கொலை என முடிவு செய்கிறார். ஆனால், பாவானாவிற்கு சந்தேகம் எழுகிறது. மரணம் அடைந்த இருவருமே மனநிலை சரியில்லாதவர்கள். அதேபோல், முதலில் நடந்த மர்ம மரணத்துடன் இந்த மரணமும் ஒத்துப்போகிறது. இது கொலை தான் என்ற முடிவிற்கு வரும் பாவானா, கொலையாளியை தீவிரமாக தேடத்தொடங்குகிறார். அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா? என்பதே அனோமி திரைப்படத்தின் சூப்பரான திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ்!
திரைப்படம் தொடங்கிய முதல் காட்சியிலிருந்து கடைசி வரை, எதிர்பாரா திருப்பங்களுடன் யூகிக்க முடியாத காட்சிகளாக செல்கிறது. அது சுவாரசியமாகவும் இருக்கிறது. பாவனா தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக உணர்ந்து நடித்திருக்கிறார். உயரதிகாரிகளின் அழுத்தத்தை தாங்கிக்கொண்டு, கொலையாளியைத் தேடிச்செல்லும் ரகுமான் திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கொடுக்கிறார். பாவனாவின் தம்பியாக நடித்துள்ள ஷெபின் பென்சன், பாவனாவின் பாய் ஃப்ரென்ட் அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா உள்ளிட்ட பலர் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்கின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு மேலும் திகிலூட்டுகிறது. இதை இன்னும் வலுபடுத்துவது போல் அமைந்திருக்கிறது, ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசை. இயக்குநர் ரியாஸ் மரத், இந்திய திரை ரசிகர்கள் அனுபவித்திராத ஒரு கதையை கொடுத்திருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். கிரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு ‘அனோமி’நிச்சயமாக பிடிக்கும்.