‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ – விமர்சனம்!

மாறுபட்ட ஆக்‌ஷன் மற்றும் சர்வதேசக் கடத்தல் பின்னணி கதைகளை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’.

சர்வதேச அளவிலான போதைப்பொருள் மாஃபியா, பேராசை, மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி புலனாய்வு ஆகியவற்றின் பின்னணியில், விறுவிறுப்பான திருப்பங்களுடன் இத்திரைப்படத்தின் திரைக்கதை சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை, நாயகன் சரண் தனது தந்தை வாங்கிய கடன் மற்றும் மோசமான குடும்பச் சூழ்நிலை காரணமாக, குறுக்கு வழியில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதில் இருந்து தொடங்குகிறது. இதற்காகத் தனது நெருங்கிய நண்பனான பால சரவணனின் உதவியுடன், கடத்தல் மன்னனான ஜே.டி. சக்கரவர்த்தி நடத்தும் ஒரு பெரிய கடத்தல் மாஃபியா கும்பலில் ஆபத்தான வேலைக்குச் சேருகிறார். சரணும் பால சரவணனும் இணைந்து தங்களது சாமார்த்தியத்தால் அடுத்தடுத்து பல பெரிய கடத்தல்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து ஜே.டி. சக்கரவர்த்தியின் நம்பிக்கையைப் பெறுகின்றனர். இந்நிலையில், பேராசை காரணமாகச் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் சர்வதேசப் போதைப்பொருளைக் கடத்தி, தங்களது முதலாளியான ஜே.டி. சக்கரவர்த்தியையே ஏமைற்றிவிட்டு அந்தப் பணத்துடன் தப்பிக்க இருவரும் ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டுகின்றனர்.

ஆனால், இவர்களின் இந்த விபரீதமான பிளான் ஒட்டுமொத்தக் கடத்தல் உலகிலும் மிகப்பெரிய பிரச்சனையில் முடிகிறது. இவர்களின் துரோகத்தால் ஆத்திரமடையும் சர்வதேசக் கடத்தல் கும்பலின் மாபெரும் தலைவனான லால், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய ஜே.டி. சக்கரவர்த்தியைக் கொல்லத் துடிக்கிறார். இன்னொரு புறம், தன்னை ஏமாற்றிய சரணையும் பால சரவணனையும் உயிரோடு விடக்கூடாது என ஜே.டி. சக்கரவர்த்தியும் அவர்களை வேட்டையாடப் பின்தொடர்கிறார். சர்வதேச அளவில் வலைப்பின்னல் போலப் பரவியுள்ள இந்த ஒட்டுமொத்த ஸ்மக்ளிங் நெட்வொர்க்கையும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் ஒரே நேரத்தில் அதிரடியாகக் கைது செய்ய சுங்கத்துறை (Customs Officer) உயர் அதிகாரி சமய முரளி களமிறங்குகிறார்.

நாயகன் சரண், குடும்பச் சூழ்நிலைக்காகத் தெரியாமல் கடத்தல் தொழிலில் இறங்கிவிட்டு, அதன் ஆபத்துகளை உணர்ந்து தவிக்கும் எளிய இளைஞனாகத் தனது உடல்மொழியால் அவர் பெரிதும் கவருகிறார். தான் செய்யும் இந்தச் சட்டவிரோதக் குற்றங்களை வீட்டில் இருக்கும் அம்மா ராதிகாவிடமும், தன் உயிரான காதலியிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ஒரு தேர்ந்த நடிகராக மிளிர்கிறார். காதல் காட்சிகளில் எதார்த்தத்தையும், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் மிடுக்கான ஆக்‌ஷனையும் வெளிப்படுத்திப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கதாநாயகி ஸ்மேஹா, தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆபத்தான சூழ்நிலையிலும் தனது காதலனை எக்காரணம் கொண்டும் கைவிட முடியாமல் தவிப்பது, அண்ணன் காளியை எதிர்த்துப் துணிச்சலாகக் கல்யாணம் செய்யும் உணர்வுப்பூர்வமான காட்சி மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கித் தவிக்கும் இக்கட்டான காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நாயகன் சரணின் நண்பனாகப் படம் முழுவதும் பயணிக்கும் பால சரவணன், படத்தின் விறுவிறுப்பான கடத்தல் காட்சிகளுக்கு நடுவிலும், ஆங்காங்கே தனது சிறு சிறு டைமிங் நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் ரசிகர்களைச் சோர்வடையாமல் தியேட்டரில் தக்க வைக்கிறார்.

கடத்தலுக்கு உதவிகளைச் செய்யும் ஜாஃபெர் சாதிக் வரும் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களை ரசிக்கவும் வைக்கின்றன, சிரிக்கவும் வைக்கின்றன. இவர்களுடன் சினேகா குப்தாவின் அதிரடியான கவர்ச்சி நடனம், படத்தின் கமர்ஷியல் வேகத்திற்கு கலக்கல் விருந்தாக அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருப்பது, சில முக்கியக் கடத்தல் மற்றும் புலனாய்வுக் காட்சிகள் மிகவும் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். குறிப்பாக, போலீஸ் விசாரணையின் போது வரும் சில காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் சற்றே சிறுபிள்ளைத்தனமாக இருப்பது போன்ற ஒரு பலவீனமான உணர்வைத் தருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சர்வதேசக் கடத்தலை இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், சுவாரசியமாகவும் திரைக்கதையில் இயக்குநர் உருவாக்கியிருக்கலாம் என்பது ஒரு சில விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

இருப்பினும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த ஒட்டுமொத்தக் குறைகளையும் நிவர்த்தி செய்து விடுகின்றன. லால் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தி உள்ளிட்ட கொடூரமான போதை மாஃபியா கும்பலை, சுங்கத்துறை அதிகாரி சமய முரளி மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு, வியூகம் அமைத்துப் பிடிக்கும் இறுதிக்கட்டக் காட்சிகள் விறுவிறுப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. யாரும் எளிதில் யூகிக்க முடியாத வகையில் கிளைமாக்ஸில் வைக்கப்பட்டுள்ள அந்த மிரட்டலான ட்விஸ்ட்  ரசிகர்களைத் தியேட்டரில் சபாஷ் போட வைக்கிறது.

சர்வதேசக் கடத்தல், குடும்பப் பாசம் மற்றும் மாஃபியா ஆக்‌ஷன் படங்களை விரும்பும் கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு, இந்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ திரைப்படம் பிடிக்கும்.