‘ஜன நாயகன்’ திரைப்படம், 4K – HD குவாலிட்டியில் வெளியானது! தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி!

விஜய் நடிப்பில் 2026 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்சனையை எதிர்கொண்டு, நீதிமன்றம் சென்றது. அதன் பிறகு நடந்த சென்சாருடனான பேச்சுவார்த்தைகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப்பிறகு, அறிவிக்கப்பட்ட தேர்தல் காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்த சூழலில், ‘ஜன நாயகன்’ திரைப்படம், 4K – HD குவாலிட்டியில் முழுப் படமும் இணையத்தில் வெளியானது. இதனால், படத்தின் தயாரிப்பாளர் உட்பட மொத்த படக்குழுவினரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
‘ஜன நாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினருலும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் .
‘நிசப்தம்’பட இயக்குநர் மைக்கேல் அருண் தனது எக்ஸ் பக்கத்தில்,
“ஜனநாயகன் பட காட்சிகளை லீக் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். நிச்சயமாக இது தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. நிச்சயமாக இது தணிக்கை குழுவிடம் வழங்கப்பட்ட பிரதி கிடையாது. ‘எடிட் ரெபரன்ஸ்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது படக்குழுவில் உள்ள மிக முக்கியமான நபர்களின் தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். எனினும் அடுத்த மீட்டிங்கில், ஜனநாயகன் படத்தின் காட்சிகளை அவர்கள் கசியவிட்டுவிட்டார்கள்… அதை யார் செய்திருப்பார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று விஜய் கூறுவார். உண்மையில், கடைசி வரை அதைச் செய்தது யார் என்பது யாருக்குமே தெரியப்போவதில்லை. ஏனெனில், இந்த ‘எடிட் ரெபரென்ஸ்’ நகலை அணுகும் அதிகாரம் படத்தின் எடிட்டரை தவிர்த்து தவிர்த்து, படத்தின் கதாநாயகன் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மட்டுமே உண்டு.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திரைப்படத் துறையின் தொழில்நுட்ப முறைப்படி, ஒரு படத்தின் ஆரம்பக்கட்ட எடிட்டிங் பணிகளின் போது மட்டுமே இத்தகைய எடிட் மார்க்குகள் கொண்ட பதிப்புகள் (ரா கட் ) பயன்படுத்தப்படும்.இத்தகைய பதிப்புகள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுபவை. குறிப்பாக, படத்தின் இயக்குநர், கதாநாயகன், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இந்த நான்கு முக்கிய நபர்களிடம் அல்லது அவர்களின் நேரடி மேற்பார்வையில் உள்ள எடிட்டிங் ஸ்டுடியோக்களில் மட்டுமே இந்தப் பிரதி இருக்கும். தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் பதிப்பு, இந்த நான்கு தரப்பில் ஏதேனும் ஒன்றிலிருந்து தான் கசிந்திருக்க வேண்டும் எனத் திரையுலகினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளத்தளங்களில் சட்டவிரோதமாக பகிரப்படும் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்யவோ பகிரவோ வேண்டாம் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.