ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரது நடிப்பினில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில்,
‘மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் ‘கருப்பு’ வின் உலகத்தை படைக்க முடிந்தது. இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ…. அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.
கருப்புப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்க வைத்த இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன். படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” என்றார்.

இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில்,
‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன். திரிஷாவின் சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும். ‘வலிமை’ படத்தின் அப்டேட்டிற்கு பிறகு ‘கருப்பு’ படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது.
கருப்புப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிடம் கதை சொன்னேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்.
சூர்யா சார் திரையில், ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் ‘கருப்பு’ படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு கொண்டாட்டமாக இருக்கும். என்றார்.