திருட்டுத்தொழிலை கைவிட நினைக்கும் தனுஷ், போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடுவின் நயவஞ்சகத்தால், வங்கிக்கொள்ளைக்காரனாக மாறுவது தான், கர திரைப்படம். இதில், தனுஷ் , மமிதா பைஜு, கே. எஸ் .ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ரீஜா ரவி , கருணாஸ், பிருத்விராஜ் பாண்டியராஜன், எம் எஸ் பாஸ்கர் , ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து எழுதி, விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இரவு நேரத்தில், பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடித்து வருகிறார், தனுஷ். தனது காதல் மனைவியின் வற்புறுத்தலால், அதை கைவிட நினைக்கிறார். இந்நிலையில், கடைசியாக தனது உறவினருக்கு கொள்ளையடிப்பதை கற்றுக்கொடுத்துவிட்டு அதிலிருந்து விடுபட முடிவெடுக்கிறார். எதிர்பாரதவிதமாக தனுஷ் மாட்டிக்கொள்கிறார். அதை, போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இதனால், தனுஷ் அங்கிருந்து தப்பித்து சொந்த ஊருக்கு செல்கிறார். ஊரில் விவசாயம் பொய்த்துப்போய் எங்கும் வறுமையான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், வங்கிகளை கொள்ளையடிக்கும் நிர்பந்தம் தனுஷூக்கு ஏற்படுகிறது. ஏன், எதற்காக? என்பதை சீட் நுனியில் அமர வைக்கும் திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் விக்னேஷ் ராஜா.
இரவு நேரத்தில், ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் முதல் காட்சியே விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கிறது. தன்பிறகான அனைத்து கொள்ளைக்காட்சிகளிலுமே விறுவிறு தான். குறிப்பாக, போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன் வங்கிக்கு வரும் போது, தனுஷும், கருணாஸூம் இணைந்து கொள்ளை அடிக்கும் காட்சி, சூப்பர் த்ரில். படிப்பறிவு இல்லாத பாமர ஜனங்களிடம் வங்கி அடிக்கும் கொள்ளை. அதனால், மக்கள் படும் அவஸ்தைகளை சொன்ன விதம், அனைத்தும் உண்மை. இதை கடன் வாங்கியவர்கள் அனைவருமே உணர்ந்த ஒன்றுதான். ஆனால், அதற்காக வங்கிகளை கொள்ளையடிக்க கிளம்புவது முரண்! காதல், அப்பா – மகன் சென்டிமென்ட். அம்மா -மகன் சென்டிமென்ட் என அனைத்தும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் நீளம் அதிகம். அதை தவிர்த்திருக்கலாம். ஸ்லோ மோஷன் காட்சிகளை தவிர்த்திருந்தால் கூடுதல் சுவாரசியம் ஏற்பட்டிருக்கும்.

கரசாமியாக தனுஷ். எளிதாக நடித்துவிட்டுப்போய் விட்டார். என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியிலுமே சிறப்பு கவனம் பெறுகிறார். அவரது காதல் மனைவியாக நடித்திருக்கும் மமிதா பைஜு குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்திருக்கிறார். தனுஷின் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் கே எஸ் ரவிக்குமாரும் , ஶ்ரீஜாவும் சிறப்பு கவனம் பெறுகிறார்கள். அதிலும் கே.எஸ் ரவிக்குமார் சூப்பர். முதன் முதலாக தனுஷை அவர் சந்திக்கும் பேருந்து காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். தேர்ந்த குணசித்திர நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். பிருத்விராஜ் பாண்டியராஜன், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சார மூடு ஆகியோரும் பாராட்டும்படி நடித்துள்ளனர்.
வயது முதிர்ந்த விவசாயியாக எம்.எஸ்.பாஸ்கர். யாரென்று தெரியாத அளவிற்கு இருக்கிறது, அவரது கெட்டப்! ஆனால், உடல் மொழி பிரமாதம். வங்கிக்கொள்ளையின் போது, தேவர் மகன் படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கு கொள்வது போன்ற சில நொடிக்காட்சி, ரசிக்கும்படியான காட்சி.
படத்தின் பெரும் பலமாக இருப்பது, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பும் தான்.
மற்றபடி, ஒரு சில படங்களின் சாயல்களை தவிர்த்து விட்டுப்பார்த்தால், ‘கர’ ரசிக்கும்படி தான் இருக்கிறது.