‘29’ – விமர்சனம்!

விது, ப்ரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், சிந்து ஷியாம், பிரேம்குமார், ஆதிரா பாண்டிய லட்சுமி, ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா , ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஸ்ரீவேலன் ஆகியோர்களது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், 29. எழுதி, இயக்கியிருக்கிறார், ரத்னகுமார். ‘ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ’ மற்றும் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

விது, சேலத்திலிருந்து சென்னைக்கு வேலை பார்க்க வரும் இளைஞன்.  இவர், குறிக்கோளற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவரது அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ப்ரீத்தி அஸ்ராணி, கலெக்டர் ஆவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இருவரும் காதல் கொள்கின்றனர். அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அதை அனுசரித்துப்போகிறார், ப்ரீத்தி அஸ்ராணி. நாட்கள் செல்லச்செல்ல விதுவின் புரிதலற்ற தன்மை மேலோங்குகிறது. இதன் பிறகும் அனுசரித்து போகமுடியாத காரணத்தினாலும், கலெக்டர் ஆகும் லட்சியம் கைகூடாத சூழ்நிலை உருவானதாலும், தனது காதலை முறித்துக்கொள்ள விரும்புகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், 29 திரைப்படத்தின் கதை.

விது, தன்னைப் பற்றி புரிந்து கொள்ளமுடியாத, எந்த இலக்குமற்ற சாதரண இளைஞனாக, குறை சொல்லமுடியாதபடி நடித்திருக்கிறார். அப்பாவின் துணையின்றி, அம்மாவின் ஆதரவுடன் லட்சியக்கணவை நோக்கி நகரும் பெண்ணாக ப்ரீத்தி அஸ்ராணி. சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது அழகும், நடிப்பும் இளஞர்களை ஒரு சேர வசீகரிக்கிறது.

வில்லனாக நடித்திருக்கிறார், மாஸ்டர் மகேந்திரன். அவருடன் அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், சிந்து ஷியாம், பிரேம்குமார், ஆதிரா பாண்டிய லட்சுமி, ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா , ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஸ்ரீவேலன் ஆகியோரும் காட்சிகளுக்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசையமைப்பு ஓகே! ‘பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு… பாடல், ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

சுவாரசியமற்ற திரைக்கதையும், நாடகத்தன்மையான காட்சிகளும் அதிகம் இருப்பதால் ரசிக்க முடியவில்லை. எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், ஒரே படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை புகுத்தி கதை எதை நோக்கி போகிறது? என்ற குழப்பத்தை படம் பார்ப்பவர்களிடையே ஏற்படுத்திவிடுகிறார்.

மொத்தத்தில்  ‘29’  ஏமாற்றம்!