பிரஜின் நடித்த  ‘அந்தரன்’ ஜூன் 25ம் தேதி வெளியாகிறது!

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.

வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரம் பேசுகையில்,

”பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்-பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் ‘அந்தரன்’ படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன்.

பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்,” என்றார்

நடிகை இவானா வருண் பேசுகையில்,

”இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.

நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில்,

”இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, ‘என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.

நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.

‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.

இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.

‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.

இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,” என்றார்.

இந்தப் படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில்,

”இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும்.

நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும். இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும். என்றார்.