‘லட்சுமி கிரியேஷன்ஸ்’ சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் அபிநட்சத்திரா, ‘காதல்’ சுகுமார் , சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ஆட்டி. த. கிட்டு இயக்கியிருக்கிறார். ஆட்டி, என்ற தமிழ் சொல்லுக்கு பல பொருள் இருந்தாலும் நேரடியான பொருள், ஆட்கொள்பவள் அல்லது ஆட்டி வைப்பவள் என்று பொருள் படும்.
கொடைக்காணல் மலைவாழ் கிராமத்தில், சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் நடக்கும் கதை. காவல்துறை அதிகாரியான (இசக்கி கார்வண்ணன்) அமைதி ராஜ், தவறுகளை தட்டிக்கேட்க தயங்காத நேர்மையாளர். பெண்களிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்கிறார். அதன் காரணமாக பல இடங்களுக்கு பணிமாறுதல்கள் மூலம் துரத்தியடிக்கப்படுகிறார். இவ்வாறான சூழலில், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு மலைக்கிராமத்திற்கு பணிமாறுதலுக்கு உள்ளாகிறார்.
இன்ஸ்பெக்டர் அமைதிராஜ் பணி மாறுதலாகி வந்த ஊரில் வசிக்கும் (அபி நட்சத்திரா) அழகு என்ற இளம் பெண், தன்னார்வ அமைப்பின் மூலம் ஒரு வகுப்பறையை அமைத்து, ஆசிரியர் வராத நேரங்களில் கல்வி கற்றுகொடுத்து வருகிறார். இந்நிலையில், புதிதாக அந்த கிராமத்திற்கு (பிரவீண் பழனிச்சாமி) செல்வம் என்கிற ஆசிரியர் வருகிறார். சில நாட்கள் சென்ற நிலையில், செல்வம் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இன்ஸ்பெக்டர் அமைதிராஜ் விசாரணையில் இறங்க, அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த குற்ற செயல்களுடன் தொடர்பு குறித்து தெரிய வருகிறது. அது என்ன? ஆசிரியர் செல்வம் மர்ம மரணத்திற்கு காரணம் யார்? என்பது தான், ஆட்டி படத்தின் கதை.
நூற்றாண்டுகளுக்கு முன்னரும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதிலிருந்து அவர்களை பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைப்போல், இப்போது தண்டனை கொடுப்பது சாத்தியாமா? ஒரு வேளை அந்த மாதிரியான தண்டனைகள் இருந்தால், பாலியல் அத்து மீறல்கள் குறையுமா? என பல கேள்விகள் எழுப்புகிறது.
இன்ஸ்பெக்டர் அமைதி ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன், மிடுக்கான தோற்றத்துடன் தனது வழக்கமான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அழகு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி நட்சத்திராவிற்கு நடிப்பினை வெளிப்படுத்தும் அளவிற்கு கதை இல்லாததால், அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆசிரியர் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிச்சாமி, விடியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் சுகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவும், தீசனின் இசையும் ஓகே. மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை.
ஆட்டி – வசப்படுத்தவில்லை!