சாருகேசி, இத்திரைப்படத்தில் வை. ஜி. மகேந்திரா, சுகாசினி மணிரத்னம், ராஜ் அய்யப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, ‘தலைவாசல்’ விஜய், மதுவந்தி மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கிறது. அருண் விசுவல்ஸ் & மெட்ராஸ் சினி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
கர்நாடக சங்கீத உலகில் மிகவும் புகழ் பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞர் (வை. ஜி. மகேந்திரா) சாருகேசி. இவரது மனைவி (சுகாசினி) பாக்யம், மகன் (ராஜ் ஐயப்பா) சஞ்சய். அவரது கார் டிரைவர் (‘தலைவாசல்’ விஜய்) செந்தில் . ஆகியோரே சாருகேசியின் குடும்பம், உலகம். மகன் மீது மட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் கொண்டுள்ளார். ஆனால், மேற்கத்திய இசையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கும் சஞ்சய்க்கோ அப்பாவை சுத்தமாக பிடிப்பதில்லை. அதற்கான காரணமாக தனது தந்தையின் பெயரும், புகழும் தடையாக இருப்பதாக நினைத்து கொள்கிறார். அப்பாவை அவமானப்படுத்து விதமாக பல காரியங்களை செய்து வருகிறார். இந்நிலையில், சாருகேசியை பழி வாங்கும் நோக்கத்தோடு, (ரம்யா பாண்டியன்) கௌதமி மருமகளாக வீட்டிற்குள் நுழைகிறார். நிம்மதி இழக்கும் சாருகேசி கடற்கரைக்கு செல்கிறார். அங்கே (சத்யராஜ்) கடவுள் அவரை ஆசுவாச்ப்படுத்துகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் சாருகேசி.
சாருகேசி கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாகவே வை. ஜி. மகேந்திரா காட்சி தருகிறார். கர்நாடக இசையை அறிந்தவர் என்பதால், எளிதாக அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அவரது மனைவி பாக்கியமாக சுகாசினி கணவருக்கேற்ற மனைவியாக, மகனின் செயலை நினைத்து துயருறும் தாயாக கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். சாருகேசியின் டிரைவராக நடித்திருக்கும் தலைவாசல் விஜய். ஒய்ஜி மகேந்திரனின் மகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா, மருமகளாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் போன்றோரும் சிறப்பான முறையில் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்
படத்தில் பாடல்களுக்கும் இசைக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஜீவனாடியாக, இசையமைப்பாளர் தேவா தனது பங்கினை சிறப்பாக வழங்கியிருக்கிறார். ஒளிப்பதிவும் ரசிக்கும்படி இருக்கிறது. மற்றபடி திரைக்கதையில் கூடுதல் சுவாரசியம் கொடுத்திருந்தால் சாருகேசி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.
ஸ்ருதி இருக்கிறது, லயம் இல்லை!