அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ (Mythri Movie Makers) தங்களது அடுத்த தமிழ் அதிரடித் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில், நடிகர் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் 4வது திரைப்படத்தின் பூஜை இன்று (ஜூலை 3, 2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சசி, ஆதிக் ரவிச்சந்திரன், அந்தோணி பாக்யராஜ், ராஜா மற்றும் ‘ஹாய் நானா’ புகழ் சௌர்யுவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இப்படத்தின் முதல் காட்சியை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ (Bison) திரைப்படத்தின் மாபெரும் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, துருவ் விக்ரம் நடிக்கும் 4-வது திரைப்படம் இதுவாகும். இதுவரை நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வந்த துருவ் விக்ரம், முதன்முறையாக பரந்த அளவிலான ரசிகர்களைக் கவரும் வகையில் முற்றிலும் மாஸ் (Mass) பாணியிலான தோற்றத்தில், ஒரு தனித்துவமான கமர்ஷியல் என்டர்டெய்னராக இதில் களம் இறங்குகிறார்.
தரமான மாஸ் ஆக்ஷன் கதையோடு, மிரட்டலான தொழில்நுட்பக் கூட்டணியும் இணைந்துள்ளதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே கோலிவுட்டில் உச்சத்தைத் தொட்டுள்ளது.