உலக அரங்கில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தும் வகையில், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றுப் பாராட்டுகளைக் குவித்த ‘ஆக்குவாய் காப்பாய்’ திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டொராண்டோ, கேன்ஸ், பெர்லின், சன்டான்ஸ், வெனிஸ், அந்தால்யா, சான் செபாஸ்டியன், ஸ்லாம்டான்ஸ் மற்றும் லண்டன் ஃபிலிம் வீல் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, உலகளாவிய சினிமா ரசிகர்களின் பெரும் கவனத்தை இப்படம் ஈர்த்துள்ளது.
பலமுறை மேடையேறி நாடக ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘அரங்கடல்’ என்ற புகழ்பெற்ற நாடகத்தைத் தழுவியே இந்தத் திரைப்படம் உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடக ஆசிரியர் சகாப்தன் எழுதிய இந்த நாடகக் கதையை, வெள்ளித்திரையின் வடிவத்திற்கு ஏற்ப சுவாரசியமான பல மாற்றங்களுடன் முழுநீளத் திரைப்படமாக மாற்றி உருவாக்கியுள்ளனர். சகாப்தன் எழுதிய இந்தக் கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து, இப்படத்தை இயக்கியுள்ளார் மதிவாசன். இவர் ஏற்கனவே கனடாவில் வெளியாகும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்வாதாரப் போராட்டத்தையும், அவரது விதியின் கதையையும் மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் மிக அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. கனடாவில் விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் இருக்கும் தனது கணவரை கடந்த ஆறு ஆண்டுகளாகப் பராமரித்து வருவதோடு, தனது ஆறு வயது மகளையும் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் வளர்த்து, கல்வி கற்பித்து வரும் ஒரு தாயின் நெஞ்சை உருக்கும் வாழ்க்கையே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. புலம் பெயர்ந்த மண்ணில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தவறான பார்வைகளையும், அடுத்தடுத்து வரும் வாழ்க்கைச் சவால்களையும் மன உறுதியோடு எதிர்கொண்டு அவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதை இப்படம் மிகவும் உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கிறது.
ஒரு பெண் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவளது துயரங்களும், அவலங்களும், போராட்டங்களும் தொடர்கதையாகவே இருக்கின்றன என்ற நிதர்சனமான கருத்தை உலகிற்கு உரக்கச் சொல்லும் படைப்பாக இது உருவாகி உள்ளது.ஆர். புரொடக்ஷன்ஸ் மற்றும் லூனார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள், AVP சினிமாஸ் புகழ் ஆகியோருடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் ஆர். முத்துக்குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். சர்வதேச அங்கீகாரங்களையும், சிறந்த பாராட்டுகளையும் பெற்றுள்ளதால், திரையரங்குகளில் இப்படத்தைக் காண சினிமா ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.