கோவையில் சூர்யா கொடுத்த ‘கருப்பு’ பட 100-வது நாள் விழா அப்டேட்!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமீதா பைஜூ முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் திருவிழா போல் நடைபெற்றது. சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விழாவில் பேசிய நாயகி மமீதா பைஜூ,

சூர்யாவுடன் ஏற்கனவே நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆனதாகவும், தற்போது இந்த படத்தின் மூலம் அந்த அரிய வாய்ப்பைக் கடவுள் தமக்கு வழங்கியுள்ளார் என்றும் கூறினார். திரைக்குப் பின்னால் சூர்யாவின் ஒழுக்கம் தமக்கு ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்று நெகிழ்ந்த அவர், படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்குப் பெரிய வழிகாட்டியாக இருந்த மூத்த நடிகை ராதிகா சரத்குமாரை மிகவும் மிஸ் செய்வதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நாயகன் சூர்யா,

கோவை விமான நிலையத்திலிருந்து இந்த விழா வரை தமக்குக் கிடைத்த அசுரத்தனமான அன்பிற்கு ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தான் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்றாலும், ரசிகர்களாகிய நீங்கள் எனக்காக ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கியதையும், நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோருக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ததையும் கவனித்து உருகிப்போனதாகக் கூறினார். கோயம்புத்தூர் தனது சொந்தப் பிறந்த மண் என்பதால், பள்ளிப் பருவத்தில் கிராமத்து விடுமுறையைக் கழித்த நினைவுகளையும், ஆடு மாடு மேய்த்தது முதல் மாட்டு வண்டி ஓட்டியது வரையிலான தங்களது பூர்வீக வாழ்வியலையும் சூர்யா மிகவும் ஆவலோடு அசைபோட்டார்.

இன்றைய இளைஞர்கள் போன் பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட்டு நிஜமான நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.தொடர்ந்து பேசிய சூர்யா, பிளாக்பஸ்டர் ஹிட்டான தனது முந்தைய திரைப்படமான ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்ட போது உடன் நின்று ஆதரவு அளித்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ‘கருப்பு’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா விரைவில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வெங்கி அட்லூரியின் முந்தைய படைப்பான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தை தான் வியந்து ரசித்ததாகக் கூறிய சூர்யா, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை தான் ஏற்கனவே முழுமையாகப் பார்த்துவிட்டதாகவும், இது ஒரு மிகச்சிறந்த நேர்த்தியான படம் என்றும் தயாரிப்பாளரிடம் பாராட்டியதாகக் கூறினார்.

இசை வெளியீட்டு விழாவின் நாயகனான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து சூர்யா பேசுகையில்,

தங்களுக்குள் இருக்கும் நீண்ட கால நட்புக் குறித்து நெகிழ்ந்தார். ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியில் ஜி.வி. பிரகாஷ் கொடுத்த பின்னணி இசை தங்களுக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது என்றார். மேலும், மலையாளப் பின்னணி கொண்ட மமீதா இந்தத் தமிழ் படத்திற்காகத் தனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசி ஒரு புதிய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார் என்றும் சூர்யா வெகுவாகப் பாராட்டினார்.

இறுதியாக, தனக்கு வெவ்வேறு அடையாளங்களைக் கொடுத்த இயக்குநர்களுக்கு மத்தியில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் தனக்கொரு புது அடையாளத்தைத் தரும் என்று சூர்யா உறுதியளித்தார். உறவுகளைப் பற்றி அற்புதமாகப் பேசும் இந்தத் திரைப்படத்தில் ரொமான்ஸ், ஃபேமிலி, காமெடி மற்றும் ஹீரோயிசம் என எல்லாம் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்றும், இது தனது ரசிகர்களுக்கான படம் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்குமான படம் என்றும் தெரிவித்தார். அன்று நண்பர்கள் தினம் என்பதால் அனைவருக்கும் தனது நண்பர்கள் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட சூர்யா, இளைஞர்கள் ஆசைப்பட்ட அனைத்து விஷயங்களும் நடந்தேற வேண்டும் என்றால் முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.