தமிழ் சினிமாவின் எதார்த்த நாயகன் விஜய் சேதுபதி நடிப்பில், திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி வணிக இயக்குநரான அட்லியின் ‘Star Studio18’ நிறுவனம் பெருமையுடன் வழங்கும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதனை ‘A for Apple Studios’ மற்றும் ‘Cine 1 Studios Production’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளன.
இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஏற்கனவே தங்களது முத்திரையைப் பதித்த விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் கைகோர்த்துள்ளது. இதற்கு முன்னதாக இவர்களது காம்பினேஷனில் வெளியாகி ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் லிஸ்டில் இருக்கும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்கள் தந்த அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து, இந்த ‘பத்தா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் உச்சத்தைத் தொட்டுள்ளது. பாலாஜி தரணிதரனின் புத்திசாலித்தனமான கதைக்களமும், விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பும் இணைந்து ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சினிமா அனுபவத்தைத் தரும் என நம்பப்படுகிறது.
பாலிவுட்டில் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்த ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு, அட்லி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் ஒரு தமிழ் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ‘ஜவான்’ படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, அட்லி தயாரிக்கும் இந்த புதிய படத்தில் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ‘ஜெய் பீம்’ படத்தில் மனதை உருக வைத்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்க, செல்வகுமார் SK ஒளிப்பதிவையும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். பிரம்மாண்ட செட்களை அமைப்பதில் வல்லவரான டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியத் திரையுலகின் டாப் தயாரிப்பாளர்களான முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின், அஜித் அந்தாரே மற்றும் இணை தயாரிப்பாளர் அஷ்வின் முருகன் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த மெகா பட்ஜெட் படத்தை உருவாக்கியுள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள், தரமான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இந்திய சினிமாவின் உச்சக்கட்ட தயாரிப்பு நிறுவனங்கள் எனப் பல பலங்களைக் கொண்டுள்ள ‘பத்தா’ திரைப்படம், வரும் அக்டோபர் 1 முதல் தியேட்டர்களில் ரசிகர்களுக்கு ஒரு தரமான சினிமா விருந்தாக அமையப் போவது உறுதி.
