தமிழ் திரையுலகில் ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இளன், தற்போது முதன்முறையாக இயக்குநராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் புதிய அவதாரமெடுத்துள்ள திரைப்படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் முன்னிலையில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் உலகமெங்கும் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னணி இயக்குநர் வெற்றிமாறன்,
ஒரு வெற்றிகரமான இயக்குநர் திடீரென நடிகராக மாறுவதற்குக் கடுமையான துணிச்சல் வேண்டும் என்றும், அந்தத் தனித்துவமான தைரியம் இளனிடம் அதிகமாகவே இருக்கிறது என்றும் பாராட்டினார். படத்தின் டிரெய்லர் மிகவும் சுவாரசியமாக வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தான் பொதுவாகவே கூச்ச சுபாவம் உடையவன் என்றும், ஆனால் இளன் தன்னை ஆசை வார்த்தை கூறி ஒரு படத்தில் நடிக்க வைத்ததாகவும் நகைச்சுவையாக நினைவு கூர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மூத்த நடிகை ராதிகா சரத்குமார்,
இத்திரைப்படம் தன்னுடைய பிறந்தநாளான ஆகஸ்ட் 21 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாவது தனக்குக் கிடைத்த மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாகும் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இன்றைய நவீன இளைஞர்களின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை முறையை முந்தைய தலைமுறையினர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் மையக்கதை என்றும் அவர் விளக்கினார்.
இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர் இளங்கோ குமரவேல் பேசுகையில்,
‘நமக்கும் நிஜ வாழ்க்கையில் இதுபோல ஒரு மாமனார் கிடைக்க மாட்டாரா’ என்று ஒவ்வொரு ரசிகரும் ஏங்கும் அளவிற்குத் தனது கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் மேடையில் பேசும்போது, இப்படத்தில் இளனின் தோற்றம் மற்றும் திரைக்கதை அமைப்பைப் பார்க்கும்போது தனக்குத் தமிழ் சினிமாவின் ‘இன்னொரு பாக்யராஜ்’ போலத் தோன்றியதாகப் பெருமிதத்துடன் பாராட்டினார்.
படத்தின் நாயகியான சான்வி மேக்னா பேசுகையில்,
ஒரே நேரத்தில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டே அதில் கதாநாயகனாகவும் நடிப்பது எப்படிச் சாத்தியம் என்று ஆரம்பத்தில் தனக்கு வியப்பாக இருந்ததாகவும், இளனிடம் இருக்கும் அசாத்திய சமயோசித புத்தியால் அது சாத்தியமாகி உள்ளதாகவும் கூறினார். மேலும், பிறமொழிப் பெண்ணான தான் முதல்முறையாக இத்திரைப்படத்தில் முழுமையாகத் தமிழிலேயே சொந்தக் குரலில் டப்பிங் பேசி நடித்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய முன்னணி நகைச்சுவை நடிகர் யோகிபாபு,
‘ஸ்டார்’ படத்தின் போதே இளன் தனக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தவறாமல் நிறைவேற்றும் வகையில் இந்தத் திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளார் என்று நன்றி தெரிவித்தார். மேலும், இளன் இயக்கத்தில் தான் அடுத்ததாக இணையவிருக்கும் மற்றொரு புதிய திரைப்படம் வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக விஷயங்களை மையமாக வைத்து உருவாகி வருவதாகவும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். விழா நாயகனான இளன் தனது நன்றியுரையில், தமிழ் சினிமாவின் மூத்த திரை ஆளுமைகளான ராதிகா சரத்குமார் மற்றும் செந்தில் ஆகியோர் தன் மீது முழு நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தில் நடித்ததற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது திரையுலகப் பயணத்தின் தூணாக விளங்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் மிகப்பெரிய பலம் என்றும், ஏற்கனவே ட்ரெண்டாகி வரும் ‘அட்ராசிட்டி’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாகப் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,
தங்களுடைய முந்தைய கூட்டணியான ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தைப் போலவே இந்த புதிய திரைப்படத்திலும் ஆரம்பத்திலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் புதிய ட்ரெண்டைப் பின்பற்றி இருப்பதாகத் தெரிவித்தார். தான் இந்தத் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டதாகவும், இது குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு தரமான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம், திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல விரும்பாத மனைவியுடன் கணவரும் மனைவியின் வீட்டிலேயே சென்று வசிக்கும் இல்லறச் சூழலை மையமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் திருமண வாழ்க்கை, குடும்ப உறவுகள், காதல், எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் உருவாகும் நகைச்சுவையான சம்பவங்களை ஒரு புதிய கோணத்தில் இத்திரைப்படம் சொல்லியிருக்கிறது. இளன் மற்றும் சான்வீ மேக்னாவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகத் தயாராகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.