‘ஒன் மேன்’ (விமர்சனம்) மூலம் உலக சாதனை படைத்த தமிழன்!

சமூக அதிர்வுகளை ஏற்படுத்திய ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மாற்றுச் சிந்தனையை விதைத்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், தற்போது ‘ஒன் மேன்’ திரைப்படத்தின் மூலம் சுயாதீன சினிமா (Independent Cinema) வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

கதைப்படி, வெவ்வேறு துறைகளில் அசாத்திய நிபுணத்துவம் பெற்ற ஐந்து துடிப்பான இளைஞர்கள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றனர். எதிர்பாராதவிதமாக, அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றிற்குள் அவர்கள் திசைமாறிச் சிக்கிக்கொள்கிறார்கள். அங்கே தற்செயலாக ஆள்நடமாட்டமில்லாத, விசித்திரமான தொழிற்சாலை ஒன்றைக் கண்டறிகிறார்கள். அந்தத் தொழிற்சாலையின் ரகசியங்களை ஆராயும்போது, ஒட்டுமொத்த உலகத்தையே ஒடுக்கி உறைய வைக்கக்கூடிய ஒரு பயங்கரமான நாசகார தொழில்நுட்ப ஆற்றல் (Destructive Science Tech) அவர்களின் கைகளில் கிடைக்கிறது.

அந்த ஆற்றலை இயக்கினால், பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும், உயிரினங்களும் உடனடியாக மறைந்துவிடுவார்கள்; அந்தத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் எஞ்சியிருப்பார்கள். குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒட்டுமொத்த உலகமும் இப்படிப்பட்ட ஒரு மாயச் சூழலில்தான் இயங்கும் என்ற விசித்திர விதியை அவர்கள் கண்டறிகிறார்கள். இந்த விநாசகரமான திட்டத்தை உலகத்தில் பரிசோதித்துப் பார்க்க அந்த இளைஞர்கள் துணிகிறார்கள். அதன் பிறகு, அவர்களின் முடிவு என்ன மாதிரியான உலகளாவிய விபரீதங்களை ஏற்படுத்தியது? மனித இனம் தப்பித்ததா? அல்லது உலகம் முற்றிலும் அழிந்ததா? என்பதைப் பல அறிவியல் புனைகதைத் திருப்பங்களுடன் விவரிக்கிறது இந்த ‘ஒன் மேன்’.

‘ஒன் மேன்’ என்ற தலைப்பிற்கு முழுமையான இலக்கணம் சேர்க்கும் வகையில், இத்திரைப்படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களான ராஜா, ரூபி, ஜாக், பூமா, ஜானி என ஐந்து வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களாகவும், படத்தில் தோன்றும் மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஒருவரே நடித்துள்ளார். “இது எப்படி சாத்தியம்?” என்ற சாமானியனின் கேள்விக்கு, நவீன தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக விடை அளித்துள்ளார்.

இதில் உச்சக்கட்ட ஆச்சரியம் என்னவென்றால், தான் நடிக்கும் காட்சிகளைத் தானே ஒளிப்பதிவும் செய்துள்ளார். கேமராவை ஆன் செய்துவிட்டு, அதற்கு முன்னே ஓடிச் சென்று நின்று, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்துவமான உணர்வுகளையும், முகபாவனைகளையும் அவர் பதிவு செய்துள்ளார். ஒரு காட்சியில் ஐந்து கதாபாத்திரங்களும் ஒன்றாகத் தோன்றும் போது, அவர்களின் நடிப்பு, அசைவுகள் மற்றும் உரையாடல்களைத் துல்லியமாகப் பொருத்துவதற்கு அசாத்தியமான திட்டமிடலும், தொழில்நுட்ப அறிவும், எல்லாவற்றிற்கும் மேலாக இமாலய அர்ப்பணிப்பும் தேவை.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் கைகளில்தான் சினிமா என்னும் கலை ஆயுதம் சிறைப்பட்டிருக்கும், எளிய சாமானியர்களுக்கு அந்த மாய உலகத்தில் இடமில்லை என்ற காலங்காலமான பிம்பத்தை இந்த ஒற்றைப் படத்தின் மூலம் உடைத்தெறிந்துள்ளார். தூய்மையான திறமையும், தளராத தன்னம்பிக்கையும் இருந்தால் எவராலும் ஒரு முழுமையான சினிமாவை உருவாக்க முடியும் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்துள்ளார். கதையின் களத்தை இந்தியக் காட்டுப் பகுதியிலிருந்து தொடங்கி, அமெரிக்கா வரை மிக நேர்த்தியாக அவர் கொண்டு சென்றிருக்கும் விதம் வியக்க வைக்கிறது.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு தனிமனித முயற்சி மட்டுமல்லாது, தற்கால சினிமா தொழில்நுட்பத்தின் அசாத்திய எல்லைகளையும் நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த படத்தில் இடம்பெறும் கார், ரயில் பயணம், ஹெலிகாப்டர் மற்றும் விமானப் பயணங்கள், அதில் நிகழும் சாகசங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் என அனைத்திற்கான கிராபிக்ஸ் (VFX) பணிகளையும் இவரே செய்துள்ளார். பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக கிராபிக்ஸ் காட்சிகளில் ஆங்காங்கே சில பலவீனங்கள் தெரிந்தாலும், அவருடைய திரைக்கதை வடிவமைப்பில் இருக்கும் வலிமை அந்தத் தழும்புகளை மறைத்துவிடுகிறது.

இவரிடம் பட்ஜெட் மட்டும்தான் பிரதான பிரச்சினையாக இருந்திருக்கிறது. ஆனால், அந்த பட்ஜெட் நிர்பந்தம்தான் அவரை இப்படி ஒரு உலக சாதனையைச் சாத்தியப்படுத்த வைத்துள்ளது. இவருக்குப் போதிய பட்ஜெட் சாத்தியப்பட்டிருந்தால், பிரம்மாண்ட இயக்குநர்களின் வரிசையில் இவர் பிரகாசித்திருப்பார் என்பது உறுதி. தான் பிரதானமாக ஏற்றுள்ள நான்கு கதாபாத்திரங்களுக்கும் நான்கு விதமான முகபாவனைகள், குரல் மாற்றங்கள் மற்றும் உடல்மொழிகளைக் கொடுத்து பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளார். இந்த அசாத்திய சாகசக் கதையின் ஊடாக அன்பைப் பற்றியும், மனிதாபிமானத்தைப் பற்றியும் மிகச் சிறந்த பாடத்தையும் எடுத்துள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாகவும், உழைப்பின் ரீதியாகவும் ஒரு தமிழன் நிகழ்த்தியுள்ள இந்த அசாத்திய உலக சாதனை முயற்சி, சினிமா விரும்பிகள் அனைவரும் கண்டிப்பாகத் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியப் படைப்பாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக, தியேட்டருக்குள் நம்பிச் செல்கிற எவரையும் இந்த ‘ஒன் மேன்’ ஏமாற்றாது; மாறாக வியப்பிலும் பிரம்மிப்பிலும் மட்டுமே ஆழ்த்தும்!