நள்ளிரவு அலறலும், மாயமான இளம்பெண்ணும்… ‘ஆக்டோபஸ்’ வெப்சீரிஸ் விமர்சனம்!

Archana Ravichandran Steal the Show in ZEE5’s Twisty Courtroom Thriller 'Octopus'!

நான்கு சுவர்களுக்குள் நடக்கும் ஒரு குடும்பப் பிரச்சினை, ஊரே சேர்ந்து தேடும் அளவிற்கு ஒரு மர்ம முடிச்சாக மாறினால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு பரபரப்பான கேள்வியோடு ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ஒரிஜினல் வெப் தொடர்தான் ‘ஆக்டோபஸ்’. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள இத்தொடரை சினிமம் நிறுவனத்தின் லிஷா சந்திரன், ஆதித்யா ராஜு மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனத்தின் சுனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் சொந்த பந்தங்களாக ஒற்றுமையுடன் வாழும் ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியில்தான் கதை தொடங்குகிறது. அங்கே புதுமணத் தம்பதிகளாகக் குடியேறுகிறார்கள் அஷ்வின் குமாரும், சித்து குமரேசனும். அனைவரிடமும் அன்பாகப் பழகி சித்து குமரேசன் எல்லோருடைய மனதிலும் இடம்பிடிக்க, அஷ்வின் குமாரோ சந்தேகமும் முரட்டுத்தனமும் கொண்ட கணவனாக வலம் வருகிறார். வீட்டுக்குள் மனைவியை அவர் அடித்துத் துன்புறுத்துவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைகிறார்கள்.

இந்நிலையில், ஒரு நள்ளிரவில் அந்த வீட்டிலிருந்து கேட்கும் பெண்ணின் மரண ஓலம் மொத்த குடியிருப்பையும் உறைய வைக்கிறது. விடிந்து பார்த்தால் அந்தப் பெண்ணைக் காணவில்லை. பதறிப்போன குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அங்கேதான் கதையின் முதல் ட்விஸ்ட் வெடிக்கிறது. அப்படியொரு பெண் அங்கே வசித்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை எனப் போலீஸ் கைவிரிக்க, குடியிருப்புவாசிகள் குழம்பிப் போகிறார்கள். இதையடுத்து, அதே குடியிருப்பில் வசிக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றவர்களின் துணையோடு அந்த மர்மத்தை உடைக்கக் களமிறங்குகிறார். தேடலின் முடிவில் வெளிப்படும் திடுக்கிடும் உண்மைகளும், நீதிமன்றத்தில் அரங்கேறும் பரபரப்புகளும் தான் ‘ஆக்டோபஸ்’.

கதாபாத்திரத் தேர்வும் நடிகர்களின் பங்களிப்பும் தொடருக்குப் பெரிய பலம். குறிப்பாக, அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது இயல்பான மற்றும் அழுத்தமான நடிப்பால் ஒட்டுமொத்தத் தொடரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதுவரை பார்த்திராத ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில், சந்தேகமும் மர்மமும் நிறைந்த கணவனாக அஷ்வின் குமார் மிரட்டியிருக்கிறார். அவருடைய மாறுபட்ட உணர்வுகள் கதைக்குத் தேவையான பதற்றத்தைக் கடத்துகின்றன.

இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி தனித்துத் தெரிகிறார். காட்சிகளில் இருக்கும் மர்மத்தையும் பதற்றத்தையும் தனது பின்னணி இசையின் மூலம் பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்தியிருக்கிறார். கண்ணா ஆர். அவர்களின் ஒளிப்பதிவு குடியிருப்புப் பகுதியின் நெருக்கத்தையும் இரவின் மர்மத்தையும் அழகாகப் படம்பிடித்துள்ளது. ராம் பாண்டியனின் படத்தொகுப்பு கதையை நகர்த்தினாலும், சில இடங்களில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆரம்பத்தில் நகைச்சுவை, அன்பு, அக்கறை என மென்மையாகத் தொடங்கும் கதையை, ஒரு பெண் மாயமான பிறகு பரபரப்பான சஸ்பென்ஸ் மற்றும் நீதிமன்றத் திரில்லராக மாற்றிய விதத்தில் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, நீதிமன்ற விசாரணை காட்சிகளும் அதில் உடைபடும் ரகசியங்களும் திரைக்கதைக்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. சில இடங்களில் கதை மெதுவாக நகர்வதும், சற்று நீளமாகத் தெரிவதும் சிறிய பலவீனமாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் திருப்பங்கள் அதை மறக்கடிக்கச் செய்கின்றன. விறுவிறுப்பான சஸ்பென்ஸ் மற்றும் கோர்ட் ரூம் டிராமா ரசிகர்களுக்கு ‘ஆக்டோபஸ்’ நிச்சயம் ஏமாற்றம் தராது.