தனுஷின் 56-வது திரைப்படம் ‘D56’ பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் துவக்கம்: கிடா விருந்துடன் தொடங்கிய படப்பிடிப்பு!தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான ‘D56’ படத்தின் பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். Sithara Entertainments சார்பில் நாக வம்சி, Primark Productions சார்பில் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios சார்பில் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை, மக்களுக்குக் கிடா விருந்தளித்துப் பெரும் கோலாகலமாகத் தொடங்கியது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் வடிவேலு,
“மாரனாடு கருப்பணசாமி கோயில் மிகவும் விசேஷமானது. தனுஷ் சாரின் படத்துக்கான பூஜை மாநாடு போல இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எந்த அரசியல் தாக்கமும் இல்லாத, தனித்துவமான இந்த கதை மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா,
“தமிழரசன் பச்சமுத்து சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். லப்பர் பந்து போலவே, D56 படத்திலும் நம் மண்ணின் கதையை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார். வடிவேலு சார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட நல்ல நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்” என்று பெருமிதம் கொண்டார்.
இறுதியாகப் பேசிய நடிகர் தனுஷ்,
“இந்த பூஜை, பின்னால் இருக்கும் சாமியையும், முன்னால் இருக்கும் உங்களையும் நம்பித்தான் நடைபெறுகிறது. இன்று நான் அதிகம் பேச விரும்பவில்லை. அனைவரும் இங்கு நடைபெறும் கடா விருந்தில் வயிறார சாப்பிட்டு, பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும். விரைவில் ஒரு படத்தின் ஆடியோ லாஞ்சில் உங்களை மீண்டும் சந்திப்பேன். இங்கு வந்து ஆசீர்வாதம் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்” என்று கூறினார்.
தனுஷின் நடிப்பு, தமிழரசன் பச்சமுத்துவின் தனித்துவமான கதை, சாய் அபயங்கரின் இசை, மற்றும் விஜய்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகும் D56 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளது.