ஃபஹத் பாசில் நடித்த ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ பட விழாவில் சூர்யா நெகிழ்ச்சி வாழ்த்து!
Fahadh Faasil's Don't Trouble The Trouble Hits Screens on Oct 2
அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில், ஃபஹத் பாசில் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தைத் தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி விநியோகம் செய்கிறது. சென்னையில் நடைபெற்ற இதன் பிரத்யேக ப்ரீ–ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினருடன் இணைந்து நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய குழந்தை நட்சத்திரம் சாரா சச்தேவ்,
“நான் இதில் திவ்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சாகசங்கள் நிறைந்த ஒரு ஃபேண்டஸி மேஜிக்கல் உலகத்திற்கு ரசிகர்களை வரவேற்கிறோம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய நாயகன் ஃபஹத் பாசில், “தெலுங்கில் எனக்கு இதுவரை பெரிய ஓப்பனிங் இல்லை, இந்தப்படம் அதை மாற்றும். என் சகோதரர் சூர்யா இந்த விழாவிற்கு வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி. சாரா போன்ற ஒரு அர்ப்பணிப்புள்ள சக நடிகையை நான் பார்த்ததில்லை. நாங்கள் இருவரும் இணைந்து இந்தப் படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம். இந்தப்படம் உங்களைச் சிரிக்கவும் வைக்கும், அழவும் வைக்கும். இசையமைப்பாளர் காலா பைரவா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் நன்றிகள்” என்று நெகிழ்ந்து கூறினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சூர்யா பேசுகையில்,
“ஃபஹத் என்னை அண்ணன் என்று அழைத்தது மிகுந்த சந்தோஷம். நாங்கள் இருவரும் தங்களின் ஆரம்பகாலப் போராட்டங்கள் குறித்துப் பலமுறை விவாதித்திருக்கிறோம். வணிகக் கணக்குகளைப் போட்டு இமேஜுக்குள் சிக்கிக் கொள்ளாமல் கதையை மட்டுமே பார்க்கும் நபர் ஃபஹத். இப்படத்திற்காக அனைத்து மொழிகளிலும் அவரே சொந்தமாகப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். ஒருவர் ஒரு பேயைக் கடத்திவிட முடியுமா என்ற கற்பனை செய்ய முடியாத ஒரு புதுமையான கதைக்களத்தை இந்தத் ட்ரெய்லர் வெளிப்படுத்தியுள்ளது. நெட்பிளிக்ஸ், டிஸ்னி படங்களையே நம் குழந்தைகளுக்குக் காண்பிக்கும் இந்தச் சூழலில், இது பெரியவர்களுக்கான ஒரு சிறந்த குழந்தைகள் படமாக இருக்கும்” என்றார்.
மேலும் பேசிய சூர்யா, “திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி 25வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் ராஜமௌலி சாருக்கு நன்றி. இந்திய சினிமாவை உங்களுடைய பெயரின் மூலம் உலகிற்கு வழங்கியதற்கு மிகப்பெரிய நன்றி. உங்களால் தான் இங்குள்ள பிராந்திய சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் சர்வதேச அளவில் ஒரு புதிய அடையாளம் கிடைத்திருக்கிறது. எனக்கு உங்களது அடுத்த படத்தில் ஒரு நாள், ஒரு நிமிடம் வந்துபோகும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும். ஒரு தயாரிப்பாளராக, இந்தத் திரைப்படத்தை இவ்வளவுதான் வர்த்தகம் செய்ய முடியும் என்ற அளவுகோல்களை நீங்கள் உடைத்தெறிந்து சினிமாத்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எனவே, எல்லா வயதினரும் தங்களது குடும்பத்தினருடன் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளுக்குச் சென்று இந்த மேஜிக்கல் திரைப்படத்தைக் காண வேண்டும்” என்று கூறி வாழ்த்தினார்.