மணிகண்டனின் முதல் முழுநீள ஆக்ஷன் படம் ‘மக்கள் காவலன்’ ரிலீஸ்!

 Makkal Kaavalan Release Date Confirmed: K. Manikandan’s Gritty Action Drama Hits Screens on December 4

‘குட் நைட்’, ‘லவ்வர்’, மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மக்கள் காவலன்’. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் மணிகண்டனின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய வேடங்களில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று ஒரு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் மணிகண்டனின் விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த ரிலீஸ் தேதி அமைந்துள்ளது.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் இத்திரைப்படம், கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்கப் பேசுகிறது. ஊழல் நிறைந்த ஓர் அமைப்பு, அவரைச் சரணடைவது அல்லது எதிர்த்துப் போராடுவது என்ற இரு தேர்வுகளுக்குள் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர்வாழ்விற்கான போராட்டமாகத் தொடங்கும் இது, பின்னர் மிகப்பெரிய பரிமாணத்தை எட்டி அவர் ஒரு மக்கள் தலைவராக மாற வேண்டிய கட்டாயச் சூழலை உருவாக்குகிறது. பிறப்புச் சூழலோ, தடைகளோ தனது லட்சியத்தின் எல்லையைத் தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் கதையே இப்படத்தின் மையப் பொருளாகும். இந்தத் திரைப்படத்தின் மூலம் மணிகண்டன் முதன்முறையாக ஒரு முழுநீள ஆக்ஷன் கதையில் கதாநாயகனாகக் களம் இறங்கியுள்ளார்.

இப்படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்ய, ‘பைசன் காளமாடன்’ படத்திற்குப் பிறகு நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அருள் மோசஸ் படத்தொகுப்பையும், டான் அசோக் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர். ‘பைசன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிர்லா மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம், வணிக ரீதியிலான லட்சியத்தையும் சமூகப் பின்னணி கொண்ட சிறந்த கதையையும் ஒன்றிணைக்கும் படைப்பாக வரவுள்ளது.