“தலைகீழாகத்தான் குதிப்பான் கோட்டைசாமி” பாணியில் ‘ட்ரோன்ஸ்’ பட தயாரிப்பாளரின் துணிச்சல்!

Siddhi Idnani Prays for Producer's Profit at Drones Launch Event

திரையுலகில் பெரிய பட்ஜெட் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் காலகட்டத்தில், சிறிய பட்ஜெட் படங்கள் தங்களது வெளியீட்டுத் தேதியைச் சற்று தள்ளி வைப்பதுதான் வழக்கமான வியாபார உத்தியாகும். ஆனால், ஜி.எம். மோர்கன் பிலிம்ஸ் (GM Morgan Films) தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’ (Drones) திரைப்படம்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகும் அடுத்த நாளான அக்டோபர் 16 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட வசூல் வேட்டை நடத்தக் காத்திருக்கும் ஒரு மெகா பட்ஜெட் படத்துடன், தங்களது சிறிய படத்தை நேரடியாக மோதவிடுவது தற்கொலைக்குச் சமம் என்றும், இது ‘ட்ரோன்ஸ்’ படத்தின் தொடக்கக்கால வசூலை (Box Office Collection) மொத்தமாகப் பாதிக்கும் ஆபத்து நிறைந்தது என்றும் சினிமா வியாபார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். படக்குழுவின் இந்த விசித்திரமான முடிவைப் பார்க்கும் போது, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கவுண்டமணியின் “தலைகீழாகத்தான் குதிப்பான் கோட்டைசாமி” என்ற வசனம் தான் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்கும் தற்போதைய சூழலில் நினைவுக்கு வருகிறது.

‘ட்ரோன்ஸ்’திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடந்த இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாயகி சித்தி இத்னானி,

“இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்த் சாரின் படத்துடன், எங்களுடைய சிறிய படத்தை ஏன் வெளியிடுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஆனால், தலைவரின் படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விஷயம்” என்று பேசிச் சமாளித்துள்ளார். மேலும், இந்த நவராத்திரி விடுமுறைக் காலத்தில் தயாரிப்பாளர் முதலீடு செய்த பணம் லாபத்துடன் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ‘பரிதாபங்கள்’ புகழ் நடிகர் டிராவிட் செல்வம்,

“ஒரு சிறிய படத்தில் அரசியல் கருத்தையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்துக் கொடுப்பதற்கு தயாரிப்பாளருக்குத் தனித் தைரியம் வேண்டும். எல்லா தயாரிப்பாளர்களும் இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்” என்று கூறி தயாரிப்பாளரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.

சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் மேட் சயின்டிஸ்ட், மோகினிப் பேய், மற்றும் தேவதை எனப் பல விசித்திரமான கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள இந்த ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம், ‘ஜெயிலர் 2’ என்ற மாபெரும் அலைக்கு முன்னால் தப்பிப் பிழைக்குமா, அல்லது பாக்ஸ் ஆபீஸில் தலைகீழாகக் குதிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.