ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை விழா: மாணவர்களின் மேம்பாட்டிற்கு கல்வி நிதி உதவி!
Sri Sivakumar Educational Trust Event: Over Rs 13.7 Lakhs Distributed to Students, Thai Tamil School, and Sudar NGO
சென்னை, தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும், விளிம்புநிலை மக்களின் கல்விக்காகத் தன்னலமற்று உழைக்கும் அமைப்புகளுக்கும் மொத்தம் 13 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இவ்விழாவில், பிளஸ்-டூ பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, தற்போது தங்களது உயர்கல்விக்காகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ. 2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக நேரிடையாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாணவர்களுக்கான உதவித்தொகை மட்டுமின்றி, கல்விப் பணியில் சிறந்து விளங்கும் முக்கிய மூன்று தன்னார்வ அமைப்புகளுக்கும் பெருந்தொகை நிதியாக வழங்கப்பட்டது. அதன்படி, திண்டிவனம் ரோசனை பகுதியில் ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளிக்கு’ ரூ. 6,28,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டப் பழங்குடி மற்றும் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகக் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ‘சுடர்’ என்ற தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 2,00,000 நிதி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மேலும், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) உன்னதப் பணிகளை மேற்கொண்டு வந்த ‘வாழை’ அமைப்பிற்கும் முக்கிய நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமித்துக் கல்வி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வரும் இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ. 25,000 வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000 வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் நேரிடையாக வழங்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சியான மாபெரும் கல்வி விழிப்புணர்வு நிகழ்வில் மூத்த கலைஞர் சிவகுமார், அவரது மனைவி, அவரது மூத்த வாரிசான முன்னணி நடிகர் சூர்யா, சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ-மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.