2K பள்ளிப் பருவக் காதலைச்சொல்லும் ‘Yours Lovingly’!
Soodhu Kavvum Director Nalan’s Associate Muthuram Murugan Debuts with a 2K Romance
எம்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் (MR Motion Pictures) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் புதிய விண்டேஜ் காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” (Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராம் முருகன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் ஸ்ரீதேவி அப்பல்லா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்தின் கதையை மகேஷ் செல்வராஜ் எழுதியுள்ளதுடன், அவரே இப்படத்தைத் தயாரித்தும் உள்ளார். தற்போது நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு (Final Schedule) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2000-களின் (2K Era) தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, மற்றும் அன்றைய காலகட்டத்தின் மறக்க முடியாத காதல் நினைவுகளை மையமாகக் கொண்டு எமோஷனலாக அமைக்கப்பட்டுள்ளது. செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பெரிதாகப் பயன்பாட்டில் இல்லாத அன்றைய காலகட்டத்தில், வாக்மேன், ஹெட்போன், நேரடிச் சந்திப்புகள் மற்றும் காதல் கடிதங்கள் (Love Letters) மூலமாகக் காதலர்கள் தங்களது உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட அழகிய வாழ்வியலை இப்படம் பேசுகிறது. தற்போது வெளியாகியுள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் வாக்மேன், காகித விமானம், ஓவியப் பொருட்கள் மற்றும் ‘சூர்யா’, ‘சில்வியா’ என்ற பெயர்கள் எழுதப்பட்ட பொருட்கள் இடம்பெற்று 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களின் பள்ளிப் பருவ நினைவுகளை அசைபோட வைத்துள்ளது.

இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோருடன் ராம்ஜி, பகவதி பெருமாள் (பக்ஸ்), மைதிலி, சந்திரன், நசாத், துஷார், மற்றும் ஆஷா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.எல். ரமேஷ் படத்தொகுப்புப் (Editing) பணிகளை மேற்கொள்கிறார். சகிஷ்னா சேவியர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்பா பிரகாஷ் கலை இயக்கத்தையும், டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளையும், கலைக்குமார் நடன இயக்கத்தையும் கவனித்துள்ளனர். 2K காலகட்டத்தின் மறக்க முடியாத நினைவுகளைத் திரையில் கொண்டுவரும் “யுவர்ஸ் லவ்விங்லி” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.