இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் தமிழ் சினிமாவில் புதிய சாதனை!
Ramnath Palanikumar Revolutionary Step in to cinema
தமிழ் திரையுலகின் நூற்றாண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான அத்தியாயத்தைப் படைக்கவுள்ளது, விரைவில் வெளியாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படம். வழக்கமாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பின்னரோ அல்லது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற பின்னரோதான் அதன் திரைக்கதை புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியாகும் நடைமுறை தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ஆனால், இந்த பாரம்பரிய நடைமுறைக்கு முற்றிலும் மாறாக, ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு திரைக்கதை (Official Shooting Screenplay), திரைப்படம் உருவாவதற்கு முன்பே அதிகாரப்பூர்வ புத்தகமாகப் பதிப்பித்து வெளியிடப்பட உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முழுநீளத் திரைப்படத்தின் அசல் திரைக்கதை, படம் திரைக்கு வருவதற்கு முன்பே பொதுமக்களின் நேரடி வாசிப்புக்குக் கிடைக்கும் முதல் முன்னோடி முயற்சியாக இது அமையவுள்ளது.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கியவரும், ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவருமான பிரபல இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். படத்தின் தலைப்பான ‘சென்சார்’ என்பதற்கு ஏற்ப, கருத்தியல் ரீதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இந்தத் தனித்துவமான முயற்சியைப் படக்குழுவினர் முன்னெடுத்துள்ளனர். திரையில் ஒரு திரைப்படத்தை காட்சிகளாகப் பார்ப்பதற்கு முன்பே, அது உருவான எழுத்து உலகத்திற்குள் வாசகர்கள் நேரடியாகப் பயணிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி குறித்துப் பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார்,
‘’தமிழ் சினிமாவில் பெரும்பாலும் திரையில் உள்ள நட்சத்திரங்களைக் கொண்டாடிய பிறகே நாம் திரைக்கதையைக் கொண்டாடும் வழக்கம் நிலவுவதாகக் குறிப்பிட்டார். ஆனால், ‘சென்சார்’ திரைப்படத்தின் திரைக்கதையைப் படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடுவதன் மூலம், வாசகர்கள் அதன் அசல் வடிவத்திலேயே கதையை அனுபவிக்க முடியும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார். இது வெறும் வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு முயற்சி மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் எழுத்துக்கும், அதை உருவாக்கும் திரைக்கதை ஆசிரியர்களின் அசாத்திய படைப்பாற்றலுக்கும் உரிய முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் தேடித்தரும் ஒரு முக்கிய முன்னெடுப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இத்திரைப்படம் மற்றும் புத்தக வெளியீடு தொடர்பான அடுத்தகட்ட கூடுதல் விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.