திரையரங்கிற்குள் நுழையும் போதே ஒருவித சில்லிப்பை ஏற்படுத்தும் அமானுஷ்யக் கதைகள் எப்போதுமே தனித்துவமானவை. அந்த வகையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி தயாரிக்க, கேஜிஎஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் பெருமையுடன் வழங்கியுள்ள ‘418’ திரைப்படம், தமிழ் ரசிகர்களை உறைந்து போகச் செய்யும் ஒரு நிஜமான திகில் அனுபவமாக உருவெடுத்துள்ளது. புதுமுக இயக்குநர் கீர்த்தன் நடாகௌடா, வழக்கமான பேய் கதைகளின் டெம்ப்ளேட்டைத் தகர்த்து, யட்சகான நாட்டுப்புறக் கலையின் பின்னணியில் ஒரு அமானுஷ்யப் பயத்தை இந்த 418 படத்தின் மூலம் பார்வையாளர்களுக்குள் கடத்தியுள்ளார்.
கதை உங்களை ஒரு அமானுஷ்யமான மருத்துவக் கல்லூரி விடுதிக்கு அழைத்துச் செல்கிறது. பெற்றோர்களாக இருந்தாலும் சரி, பெண்கள் உள்ளே நுழைவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட அந்த ஆண்கள் விடுதியில், ஒரு குறிப்பிட்ட அறை மட்டும் பல வருடங்களாக மர்மமான முறையில் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. அந்த அறையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என்ற விடுதி நிர்வாகத்தின் கடுமையான உத்தரவு, சில மாணவர்களிடையே விபரீத ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஒரு இளம்பெண் சவாலை ஏற்று, அந்த அறையைத் திறக்கத் துணிகிறார். அவருடன் மாணவர்களும் இணைந்து கொண்டு, அந்தப் பூட்டை உடைக்கிறார்கள். கதவு திறக்கப்பட்ட அடுத்த கணமே, அந்த இருண்ட அறைக்குள் பல வருடங்களாக உறைந்து கிடந்த ஒரு கொடூரமான அமானுஷ்ய சக்தி வெளியேறி, விடுதியில் இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடத் தொடங்குகிறது. அந்தப் பயங்கரமான மரணப் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, கடந்த காலத்தில் அந்த 418 ஆம் எண் அறைக்குள் மறைக்கப்பட்ட உண்மை என்ன என்பதே இந்தத் திரைப்படத்தின் அதிரவைக்கும் மீதிக்கதையாகும்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, 418 ஆம் எண் அறைக்கு மிக அருகில் இருக்கும் 417 ஆம் அறையில் தங்கியிருக்கும் விவேக் என்ற மாணவனுக்குத் தோன்றும் அச்சுறுத்தும் அசாதாரணமான கனவுகள் உங்களைச் சீட்டின் நுனிக்குக் கொண்டு வந்துவிடுகின்றன. அவன் மனநல மருத்துவரைச் சந்திக்கும் போது கதை முற்றிலும் ஒரு புதிய இருண்ட திசையை நோக்கிப் பயணிக்கிறது. மூடநம்பிக்கைகளைப் பின்பற்றும் ஒரு மர்மமான கூட்டம், யட்சர்கள், யட்சகானம் மற்றும் கண்களால் விவரிக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகள் எனத் திரைக்கதை முழுவதும் ஒருவித திகில் கலந்த பதற்றத்தை இயக்குநர் தக்கவைத்துள்ளார்.
இப்படத்தில் தேவகியாக வந்து யட்சகானம் பாடி ஆடும் நாட்டுப்புறக் கலைஞராக நடிகை சைத்ரா ஆச்சார் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் மிகவும் சாதுவாக வரும் அவர், பிற்பாதியில் அமானுஷ்ய சக்தி வெளிப்படும் காட்சிகளில் தனது மிரட்டலான உடல்மொழியால் திரையரங்கையே அதிர வைக்கிறார். விவேக் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளம் நடிகர், மரண பயத்தின் உச்சக்கட்ட உணர்வுகளைத் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் ரசிகர்களுக்கு அப்படியே கடத்தியுள்ளார். விவேக்கின் நண்பனாக ரோஹித் பாத்திரத்தில் நடித்தவரும் மிகவும் எதார்த்தமான நடிப்பைத் தந்துள்ளார். எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக வரும் சற்று உடல் எடை கூடிய ஒரு நடிகர், கடுமையான நெருக்கடி மற்றும் பயமுறுத்தும் சூழல்களுக்கு நடுவிலும் ரசிகர்களைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சாயிஷா என்ற கதாபாத்திரத்தில் வரும் இளம்பெண், ஆரம்பத்தில் மிகுந்த தைரியத்திற்கு உதாரணமாகவும், பின்னர் அமானுஷ்யச் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்பவராகவும் திரையில் பெரிதும் கவனிக்க வைக்கிறார்.
தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தின் திகில் உணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இசையமைப்பாளர் வெங்கி ஜிஜியின் அச்சுறுத்தும் பின்னணி இசை, தியேட்டரில் இருக்கும் ரசிகர்களைப் பீதி கொள்ள வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான கேமரா ஒர்க் இருண்ட விடுதி அறைகளின் பயங்கரத்தை மிக அச்சுறுத்தலாகப் படம்பிடித்துப் பாராட்டுகளைப் பெறுகிறது. எந்தவித சமரசமும் இல்லாமல் அசல் அமானுஷ்ய சக்தி மற்றும் மிஸ்டரி திரைப்படங்களை தியேட்டரில் ரசிக்க விரும்பும் ஹாரர் ரசிகர்களுக்கு இது பிடிக்கும்.