வில்லிசைக் கலைஞர் மாதவி பாடிய ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ!

1. Arulnithi and Ameer Starrer Vettai Saamy Movie First Single Saamy Azhaippu Lyrical Video Out Now.

7 மைல்ஸ் பர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் (7 Miles Per Second Productions) நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், ‘பம்பர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. தென் தமிழகத்தின் 1பண்பாடு, வீரம் மற்றும் மக்களின் ஆழமான தெய்வ நம்பிக்கையை முதன்மையாகக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ என்ற லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் பாரம்பரியக் கிராமத்துத் திருவிழாக்களையும், மக்களின் வாழ்வியலையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட பிரபல கிராமத்துக் கலைஞர் மாதவி, இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாகத் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அடியெடுத்து வைத்துள்ளார். வில்லுப்பாட்டு கலையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்பைப் பெற்ற வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாகச் சினிமாவில் பாடியுள்ள இந்த ஆன்மீகப் பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அதிர்வை அப்படியே பார்வையாளர்களுக்குக் கடத்தும் வகையில் அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் இத்திரைப்படத்திற்காக மொத்தம் 7 பாடல்கள் உருவாகியுள்ளன. அதில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் திருவிழா மேளதாளங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின் உச்சக்கட்ட அனுபவத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘தாய் கிழவி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்களின் மூலம் கவனம் பெற்ற பாடலாசிரியர் மு.ஜெகன் கவிராஜ், ‘வீரம் பாயும் நெல்லையிலே…’ எனத் தொடங்கும் இந்தப் பாடலின் கம்பீரமான வரிகளை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்களின் ஆடியோ உரிமையை பிரைம்9 மியூசிக் (Prime9 Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இத்திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் அமீர் கூட்டணியுடன் இணைந்து இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவிலும், ரூபனின் படத்தொகுப்பிலும் இத்திரைப்படம் காட்சி ரீதியாக நேர்த்தியாகத் தயாராகியுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் (Post-production) பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் ‘வேட்ட சாமி’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.