ஷாருக்கானின் ‘கிங்’ பட முதல் பாடல் வெளியீடு!

Shah Rukh Khan's 'KING' Theatrical Release Scheduled for December 24!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட பரிசளிக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ (KING) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தூ மில் ஜாயே’ (Tu Mil Jaaye) பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்கக் காதல் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பாடலாக உருவாகியுள்ள இதில், பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் இணைந்து மீண்டும் திரையில் தோன்றுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அழகான காதல் தருணங்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் மூலம் இந்த நட்சத்திர ஜோடியின் திரை மேஜிக் இப்பாடலில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர்களான சச்சின் – ஜிகர் இசையமைப்பில், பாடலாசிரியர் குமார் வரிகளை எழுத, பியூஷ் – ஷாஜியா ஜோடி இதற்கு நடனம் அமைத்துள்ளனர். இப்பாடல் உலகளாவிய இசைத் துறையின் உச்ச நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் ஒரு பிரம்மாண்டமான பாலமாக அமைந்துள்ளது. இந்தியாவின் முன்னணிப் பாடகர் அர்ஜித் சிங்கின் காந்தக் குரலும், உலகப் புகழ்பெற்ற சர்வதேச பாப் இசை நட்சத்திரம் எட் ஷீரனின் ஆங்கில ராப் வரிகளும் இணைந்து இப்பாடலை ஒரு சர்வதேசத் தரத்திலான இசை விருந்தாக மாற்றியுள்ளன. இவர்களுடன் மதுபந்தி பாக்ஸியின் குரலும் இணைந்து பாடலுக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

‘கிங்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்பாடலில் ஷாருக்கானின் மிரட்டலான மாஸ் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பாடலின் தொடக்கத்தில் இடம்பெறும் காதல் வசனத்தைத் தொடர்ந்து, அதன் இறுதியில் வரும், “இந்த முறை இதயத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது; உலகத்தையே எரித்து விடாமல் நான் ஓயமாட்டேன்!” என்ற அவரது கம்பீரமான உரையாடல், படத்தின் தீவிரமான ஆக்ஷன் சூழலை உறுதிப்படுத்துகிறது. பிரபல இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.