அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியில் சைக்கலாஜிக்கல் கிரைம் த்ரில்லர்!
Arjun Das’s Psychological Crime Thriller ‘John Doe’ Set for a Grand Theatrical Release on November 13
உலகப் புகழ்பெற்ற ‘பாகுபலி’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம், தமிழில் முதன்முறையாகத் தயாரித்துள்ள ‘ஜான் டோ’ (John Doe) திரைப்படம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னணி தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை, தமிழ் திரையுலகின் முன்னணிப் பெண் இயக்குநரான மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் உருவான விதம் மற்றும் அதன் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாயகன் அர்ஜுன் தாஸ்,
இயக்குநர் மதுமிதா தன்னிடம் இக்கதையைக் கூறி, முதலில் படித்துப் பார்க்கச் சொன்னதாகவும், கதையின் சுவாரசியத்தால் கவரப்பட்டு உடனே நடிக்கச் சம்மதித்ததாகவும் குறிப்பிட்டார். அர்கா மீடியாவொர்க்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்துடன் பணியாற்றியது பெருமையளிப்பதாகத் தெரிவித்த அவர், சக கலைஞர்களான நீரவ், ஜாரா, ஸ்ருஷ்டி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோரின் சிறப்பான நடிப்பைப் பாராட்டினார். குறிப்பாக, ஸ்ருஷ்டிக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும், ‘சிங்க் சவுண்ட்’ முறையில் படப்பிடிப்பு நடைபெற்றதால் வசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்து ஒரே டேக்கில் பேசி அசத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், இப்படத்தில் தனது தாயாராக நடித்துள்ள மூத்த நடிகை அர்ச்சனா அவர்களைத் தனது ‘அதிர்ஷ்ட தேவதை’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அர்ஜுன் தாஸ், தனது சகோதரி மாளவிகா இத்திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகவும், அவர் தகுதி அடிப்படையில் குரல் தேர்வில் (Audition) வென்று பாடியது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் (AGS Entertainment) மற்றும் அதன் நிர்வாகி அர்ச்சனா கல்பாத்தி, வணிகக் கூட்டாளிகளான நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ் மற்றும் டிவோ ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த மேடையில் அவர் தனது நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மதுமிதா,
தான் எந்த ஜானரில் திரைப்படங்களை உருவாக்கினாலும் மனித உணர்வுகளுக்குத் தான் எப்போதும் முதலிடம் கொடுப்பதாகத் தெரிவித்தார். ‘ஜான் டோ’ ஒரு அழுத்தமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமாக இருந்தாலும், இதில் உணர்வுபூர்வமான அம்சங்கள் மிக ஆழமாகப் பேசப்பட்டிருப்பதாகக் கூறினார். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள ‘குறிஞ்சி மேடு’ என்ற பனி படர்ந்த மலைப்பிரதேசப் பின்னணியில் இக்கதை நகர்கிறது என்றும், இதில் நடிகர் அர்ஜுன் தாஸ் கேரள மாநிலக் காவல் அதிகாரியாகவும், நடிகை சஞ்சனா நடராஜன் தமிழ்நாடு மாநிலக் காவல் அதிகாரியாகவும் நடித்துள்ளதாகத் தெரிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது மேடையில் வழங்கப்பட்ட சிவப்பு நிற டெடி பியர் பொம்மையின் பின்னணியில் இருக்கும் உளவியல் ரகசியத்தைக் குறிப்பிட்ட அவர், “நம்மிடம் சில குறைகள் இருந்தாலும் நாம் நம்முடைய இடத்தில் சிறந்தவர்கள்தான், ‘நாம் இந்த உலகிற்குப் போதுமானவர்கள்தான்’ (We are enough) என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்தச் சிவப்பு நிற டெடி பியர் அடையாளமாக வழங்கப்பட்டது” என்று விவரித்தார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் இத்திரைப்படம் மிகவும் வலுவான மற்றும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தின் விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். படத்திற்குப் பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். பிரபல ‘ஆர்டிஸ்ட் 404’ (Artist 404) நிறுவனம் கூடுதல் இசைப் பணிகளை மேற்கொள்ள, விஜய் வெங்கடரமணன் படத்தொகுப்புப் பணிகளையும், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் தனது திரைப்பயணத்தில் முதன்முறையாக ஒரு முழுநீளக் காவல் அதிகாரி (Police Officer) கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம், பார்வையாளர்களைத் தொடக்கம் முதல் இறுதி வரை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டுள்ளதால், நவம்பர் 13 முதல் தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்தைக் குடும்பத்துடன் பார்த்து ரசிகர்கள் பேராதரவை வழங்க வேண்டும் எனப் படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.