பேசில் ஜோசப் – அக்ஷய் குமார் கூட்டணியில் ‘ராவடி’ பட முதல் பாடல் வெளியீடு!

First Single 'Adra Parama' Released from Basil Joseph and LK Akshay Kumar Starrer 'Raawadi'

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு எல். கே. விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இளம் இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராக (Commercial Entertainer) உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஏற்கனவே ‘படிடா பரமா’ என்ற வசனம் மீம்கள் மூலம் அசுர வேகத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனை மையமாகக் கொண்டு, தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அட்ரா பரமா..’ என்ற துள்ளல் இசைப் பாடல் வெளியாகி இணையத்தில் புதிய ட்ரெண்டிங்கை உருவாக்கியுள்ளது.

‘பொடி பொடியா அடிச்சது பொடியன் இல்ல பாத்துக்க பாத்துக்க…’ எனத் தொடங்கும் இப்பாடலை பாடலாசிரியர் உதய் எழுத, தனது கணீரென்ற குரலால் சுயாதீன இசை உலகில் முத்திரை பதித்த பின்னணிப் பாடகர் அறிவு பாடியுள்ளார். ஜென் மார்ட்டினின் இசையமைப்பில், இளைஞர்களை உடனடியாக நடனமாட வைக்கும் அதிவேகக் குத்துப் பாடலாக (Dance Kuthu Number) இது, யூடியூப் மற்றும் ஆடியோ தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.