மும்பையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் இயக்குநராகப் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண், தனது புதிய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பிற்காகக் கோவாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு தற்செயலாக சித்தி இத்னானியைக் காணும் அவர், முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டு, அவரையே தனது புதிய நிகழ்ச்சிக்காகவும் ஒப்பந்தம் செய்கிறார். ஆனால், விபத்தில் சிக்கி, கோமா (Coma) நிலையில் இருக்கும் தனது காதலனை மீட்க சித்தி இத்னானி போராடி வருகிறார். இந்த பயணத்தில் ஹரிஷ் காட்டும் அன்பு ஒரு கட்டத்தில் சித்திக்கு அவர் மீது காதலை உருவாக்குகிறது. கோமாவில் இருந்த பழைய காதலன் சுயநினைவு பெற்றுத் திரும்பிய பிறகு இவர்களின் காதல் என்னவானது என்பதே கதை.
இயக்குநர் சசியின் எழுத்து மற்றும் இயக்கத்தில், ZEE5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், மனித உணர்வுகளையும் காதலின் மாற்றுப் பரிமாணத்தையும் ஆழமாக விவரிக்கும் ஒரு அழுத்தமான காதல் கதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரசன்னா எஸ். குமாரின் வண்ணமயமான ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் சித்து குமாரின் மெலடிப் பாடல்களும் படத்திற்குப் பெரிய பலம். கோவை சரளா, தம்பி ராமையா ஆகியோரின் இயல்பான நடிப்புடன், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நேர்த்தியான காதல் காவியமாக ‘நூறு கோடி வானவில்’ கவனம் பெற்றுள்ளது.