மின்மாற்றியில் கூடு கட்டிய பறவைக்காக இருளில் மூழ்கிய ஊர்!
35 Days Without Power to Save a Bird’s Nest
தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ (Koodu). பனோரமா ஸ்டுடியோஸ் (Panorama Studios) சார்பில் குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் (Skymoon Entertainment) சார்பில் M. கணேஷ், மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) சார்பில் சுனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள இப்படம், மனிதநேயம், கருணை மற்றும் சமூக ஒற்றுமையை அழுத்தமாகப் பேசுகிறது. ஒரு கிராமத்திலுள்ள மின்மாற்றிக்குள் (Electrical Transformer) அரிய வகைப் பறவை ஒன்று கூடு கட்டி முட்டையிடுகிறது. அந்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பத்திரமாக வெளியேறும் வரை, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து 35 நாட்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடிவு செய்கின்றனர். இந்த வியப்பூட்டும் உண்மைச் சம்பவத்தை நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்து சுவாரசியமான திரைக்கதையாக உருவாக்கியுள்ளனர்.
உண்மையான கிராமப்புறப் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜே கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, சார்லஸ் வினோத், அனிதா சம்பத், சசி செல்வராஜ், திராவிட் செல்வம், விஜே ஆஷிக் மற்றும் தனலட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் கிருஷ்ணா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து பனோரமா ஸ்டுடியோஸ் தலைவர் குமார் மங்கட் பதக் கூறுகையில்,
“உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உணர்வுகளையும் சமூக ஒற்றுமையையும் அழகாக இணைத்திருப்பதால் ‘கூடு’ எங்களை மிகவும் கவர்ந்தது. இது ரசிகர்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிக்கும்” என்றார்.
நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக் பேசுகையில்,
“மற்றொரு உயிரைக் காப்பாற்ற நாம் செய்யும் சிறிய தியாகம்கூட மிகப்பெரிய அர்த்தம் கொண்டது என்பதை இப்படம் நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், “மனிதநேயத்தையும் சிறிய செயல்களால் உருவாகும் பெரிய மாற்றங்களையும் கொண்டாடும் இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதைத் தொடும்” என ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் M. கணேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கல்ட் டிஜிட்டல் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறுகையில், “நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையிலிருந்து உருவாகும் இத்தகைய நேர்மையான கதையுடன் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.
அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘கூடு’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.