80 ஏக்கரில் பிரம்மாண்ட கிராமம்… மாயாஜால உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

Chitukurinji : Fantasy Romantic Drama Set for Nov 27th Release

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கியுள்ள திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’. ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், இரண்டு காலகட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இப்படத்திற்காக கொடைக்கானல் அருகே சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகள் உருவாக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஹங்கேரியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் இப்படத்தின் இசையில் பங்களித்துள்ளனர். ரஜித் சிஆர், நக்ஷா சரண், ஜி.எம். குமார், ஆதவன், ஸ்ரீராம் கார்த்திக், வெங்கடேஷ், வி.ஜே. பப்பு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

விழாவில் பேசிய இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம்,

“கல்லூரி நாட்களில் கையெழுத்துப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகத் தொடங்கிய எனது பயணம், இன்று ‘சிட்டுக்குறிஞ்சி’ வரை வந்துள்ளது. இப்படம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி என்னை இயக்கியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் பல்வேறு சவால்களைக் கடந்து வந்துள்ளது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்களின் பேராதரவு மிகவும் அவசியம்” எனக் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மூத்த நடிகர் ஜி.எம். குமார்,

பெரிய படங்களுக்கு மத்தியில் சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள சவால்களைப் பகிர்ந்ததோடு, தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் மற்றும் இயக்குநரின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். சிறிய படங்களுக்கும் திரையரங்குகளில் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நடிகை நக்ஷா சரண் பேசுகையில்,

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும், ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய கதாநாயகன் ரஜித் சிஆர்,

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் அறிமுகமான தனது சினிமா பயணத்தை நினைவுகூர்ந்தார். மேலும், நேர்கோட்டில் நகரும் இப்படத்தின் திரைக்கதை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையிலும், ஒவ்வொரு காட்சியும் புதுமையான அனுபவத்தைத் தரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் மற்றும் புடாபெஸ்ட் இசைக்குழுவின் பங்களிப்பால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம், வரும் நவம்பர் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.