‘அப்பா குட்டி’ முன் வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி பகிர்ந்த சுவாரசியத் தகவல்கள்!
Vijay Antony Starrer Appa Kutti Set for Grand Release on November 20
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உற்சாகத்துடன் நடைபெற்றது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை மீரா விஜய் ஆண்டனி வழங்கியுள்ளார். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான பாசத்தையும், உணர்வுபூர்வமான பிணைப்பையும் மையப்படுத்தி முழுக்க முழுக்க குடும்பப் பொழுதுபோக்குப் படமாக இது தயாராகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்க, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஊட்டி மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளையும் கவனித்துள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
விழாவில் பேசிய இயக்குநர் மு. மாறன்,
“ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃபாத்திமா மேடம் இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் கேட்ட அனைத்தையும் எந்தக் குறையும் வைக்காமல் செய்து கொடுத்த விஜய் ஆண்டனி சார் மற்றும் ஃபாத்திமா மேடம்தான் இப்படத்தின் முக்கியத் தூண்கள். விஜய் ஆண்டனியை எப்படிக் கையாண்டீர்கள் எனப் பலரும் கேட்பார்கள். ஆனால், தண்ணீர் எந்தச் சூழலிலும் தன்னைப் பொருத்திக்கொள்வது போல அவரும் மிகவும் எளிமையானவர். ஒரு படப்பிடிப்பின்போது கை கழுவத் தண்ணீர் இல்லாததால் மழைநீரிலேயே கை கழுவிக்கொண்டார். வரும் நவம்பர் 20-ஆம் தேதி பல படங்களுடன் போட்டிக்கு மத்தியில் வெளியானாலும், எங்கள் உழைப்புக்கு நிச்சயம் மக்கள் ஆதரவு தருவார்கள். மீரா எங்களுடன் நேரில் இல்லாவிட்டாலும் எங்கள் மனதில் இருக்கிறார். உலகத்தில் இருக்கும் அனைத்து மீராக்களுக்கும் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறோம்” என உணர்வுபூர்வமாகப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி,
“இயக்குநர் மு. மாறன் மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் படம் அவருக்குப் பெரிய அங்கீகாரத்தையும் வெற்றியையும் தேடித்தரும். இதில் நாயகியாக நடித்துள்ள ப்ரீத்தி அஸ்ராணிக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம். திருமணமான ஒரு ஆணைக் காதலிக்கும் முதிர்ச்சியான உணர்வுகளை அவர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மேடையில் பேசுவதும், குறிப்பாக லாரா மேடையில் பேசியதும் எனக்குப் பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. ‘அப்பா குட்டி’ படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து மகிழலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் நிச்சயம் தங்களது அப்பாவுக்கு போன் செய்து பேசுவீர்கள். அந்த அளவுக்குத் தந்தை-மகள் உறவை நெகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறோம். ஏகாதசி, அருண்பாரதி வரிகளில் உருவாகியுள்ள ‘அப்பாவைப் போல இங்கே யாரிருக்கா?’ பாடலும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.