ஒரே இரவில் காட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்கள்!  – ‘மின்னும் ஓர் இரவு’!

Inigo Prabhakar’s 'Minnum Oru Iravu' Trailer Out Now

இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் டிரைலர் சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது ‘எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ்’ பேனரில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ்’ சார்பில் குகன் சண்முகம் இப்படத்தை வெளியிடுகிறார்.

இப்படத்தில் இனிகோ பிரபாகருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடித்துள்ளார். இவர்களுடன் சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை எஸ்.என். பாசில் கவனிக்க, சண்டைப் பயிற்சியை மிரட்டல் சிவா வடிவமைத்துள்ளார். தேவராஜ் கலை இயக்கத்தையும், சி. முத்து சுடலை ஒப்பனையையும், கார்த்திக் தமிழ்வாணன் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் பேசுகையில்,

“ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள், மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதே படத்தின் கதை,” என்றார்.

மேலும் நாயகன் இனிகோ பிரபாகர் குறித்துக் கூறுகையில், “படம் தொடங்கியபோது அந்நியர்களாகப் பழகத் தொடங்கிய நாங்கள், படம் முடியும் போது நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இனிகோ பிரபாகர், படத்தின் உருவாக்கம் மற்றும் வெளியீட்டிலும் மிகவும் ஆதரவாக இருந்தார்,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்க, விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.