”சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு என் மனதைத் தொட்ட கதை இது!” – துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!
Dulquer Salmaan calls 'AOT' a film made for every daughter's dream!
இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT). கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்க, லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன், அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வரும் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய அறிமுக நாயகி சாத்விகா வீரவல்லி,
தமிழ் சினிமாவில் அறிமுகமாவது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தன்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்துடன் சேர்த்து மூன்று படங்களில் வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறிய அவர், துல்கர் சல்மான் போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார். படப்பிடிப்புத் தளத்தில் மூத்த நடிகர் சின்னி ஜெயந்த் தனக்குத் தமிழ் பேச உதவியதையும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மற்றும் ‘ராதே ராதே’ பாடல் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,
இப்படத்தின் கதையைக் கேட்டபோதே இது ஒரு சிறப்பான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்ததாகக் கூறினார். படத்தைப் பார்த்த பிறகு, இந்திய சினிமாவின் முக்கியமான நவீன கிளாசிக் திரைப்படமாக இது இருக்கும் என்றும், பல விருதுகளைக் குவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். குடும்ப உறவுகள் மற்றும் சுய விழிப்புணர்வு குறித்துப் பேசும் இப்படம், ‘லக்கி பாஸ்கர்’ படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மானுடன் தனக்கு மற்றுமொரு வெற்றிப் படமாக அமையும் என்றார்.

இறுதியாகப் பேசிய நடிகர் துல்கர் சல்மான்,
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குச் சென்னை பத்திரிகையாளர்கள் அளித்த ஆதரவை எப்போதும் மறக்க முடியாது என்று நன்றி தெரிவித்தார். ‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையைக் கேட்டதாகவும், கதாநாயகியை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் இதன் தாக்கம் பிடித்துப் போனதால் வேறு யாரிடமும் சென்றுவிடக் கூடாது என எண்ணி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவில் பொறியியல் படித்துப் பணியாற்றிய சாத்விகா வீரவல்லி, ‘கல்பனா’ என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பதாகவும், இது அவருடைய முதல் படம் போலவே தெரியவில்லை என்றும் பாராட்டினார். தம்பியைப் போன்ற ஜி.வி. பிரகாஷ் குமார் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே இசைப் பணிகளை முடித்துக் கொடுத்ததைப் புகழ்ந்த துல்கர், இப்படத்தில் பணியாற்றிய பலரும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் என்பதால் ஒரு பெண்ணின் கனவுகளையும் குடும்ப ஆதரவையும் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்திருப்பதாகக் கூறினார். நம் வீட்டில் இருக்கும் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்காக அனைவரும் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.