வெங்கட்பிரபு சிஷ்யன் இயக்கத்தில் இணையும் ‘MAD’ பட நாயகன்!

'MAD' Fame Ram Nithin Teams Up with Venkat Prabhu’s Protege Karthik Jai Palani for a Tamil-Telugu Bilingual!

தெலுங்கில் வெளியாகி இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் ராம் நிதின், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற கார்த்திக் ஜெய் பழனி, இப்படத்தின் மூலம் இயக்குநராகத் திரையுலகில் தடம் பதிக்கிறார். காதலை மையமாகக் கொண்டு அனைத்து கமர்சியல் அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில், ராம் நிதினுக்கு ஜோடியாக பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி ஆகிய இரு இளம் நாயகிகள் நடிக்கின்றனர். ‘பார்க்கிங்’ மற்றும் ‘TTT’ படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற பிராத்தனா நாதன், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நின்ஜா’ படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல், ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தேஜு அஸ்வினி, அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்திலும் கதாநாயகியாக வலம் வருகிறார்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ். சினிஷ் தொடங்கிய ‘சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ நிறுவனம், இதற்கு முன்பு மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘பார்க்கிங்’, ‘டிக்கிலோனா’ மற்றும் தெலுங்கில் ‘விவாஹ போஜனம்பு’ போன்ற வித்தியாசமான படங்களைத் தயாரித்து முத்திரை பதித்துள்ளது. தற்போது இந்நிறுவனம், தமிழ் மற்றும் மலையாளத்தில் ‘சூப்பர் ஹீரோ’, ‘ஃபேமிலி ட்ரிப்’ மற்றும் ஜெயராம் – சிம்ரன் இணையும் புதிய படம் ஆகியவற்றைத் தயாரித்து வரும் சஞ்சன் ஜி.-யின் ‘ரெடாக்டட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்தப் புதிய கூட்டணியின் மூலம் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய கூட்டணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், திறமையான நடிகர்கள் மற்றும் புதிய படைப்பாற்றல் கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு சுவாரசியமான காதல் கதையை உருவாக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், புதிய திறமைகளையும் புதுமையான சிந்தனைகளையும் தங்கள் நிறுவனம் எப்போதும் வரவேற்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்காலிகமாக ‘புரொடக்ஷன் No. 7’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.