“சிறுவர்களுக்கும் HPV தடுப்பூசி அவசியம்!” – ரோட்டரி கிளப்பின் ‘HPVAX’ விழிப்புணர்வு விழா!
"Consider HPV Vaccination for Boys Too": Actress Gautami Urges at Rotary Club of Madras’ Landmark 'HPVAX' Launch!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கும் நோக்கில், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சேவைப் பாரம்பரியம் கொண்ட ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் (RCM) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் HPV தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை இந்த அமைப்பு பெற்றுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் கிளப்பின் தலைவர் ரொட்டேரியன் எஸ். பாலகிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில், சுகாதார அமைச்சரின் செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது, ஐஏஎஸ், மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகளான டாக்டர் ஏ. சோமசுந்தரம், டாக்டர் பரணிதரன், டாக்டர் விஜயலட்சுமி மற்றும் நடிகை கௌதமி தடிமல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய விருந்தினர்கள், HPV தடுப்பூசியை உரிய நேரத்தில் செலுத்துவதன் முக்கியத்துவம், மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் நோய்த் தடுப்புக்காக அனைவரும் இணைந்து செயல்படுவது குறித்து வலியுறுத்தினர். அப்போது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை கௌதமி பேசுகையில்,
HPV தொடர்பான நோய்களிலிருந்து சிறுவர்களையும் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்ற முக்கியக் கருத்தை முன்வைத்தார். விழாவின் சிறப்பம்சமாகப் பொது சுகாதாரத் துறையின் ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் கூட்டு முயற்சியைக் குறிக்கும் விதமாக விருந்தினர்களும் அதிகாரிகளும் தமிழ்நாடு வரைபடத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த 1929-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 98 ஆண்டுகள் பழமையான இந்த கிளப், வருகிற 2029-ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. “10 லட்சம் சிறுமிகள், 10 லட்சம் எதிர்காலங்கள்” என்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘HPVAX’ திட்டத்தின் மூலம், நூற்றாண்டு விழாவிற்குள் தமிழகம் முழுவதும் 10 லட்சம் சிறுமிகளைப் பாதுகாக்க உதவ கிளப் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகத் தமிழில் விழிப்புணர்வுத் தகவல்கள் வழங்குதல், பள்ளிகள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடுதல், மருத்துவ நிபுணர்கள் மற்றும் ரோட்டரி தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துச் சேவைகள் குறைவாகச் சென்றடையும் பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் உரிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் அனுமதிகளுடன் மேற்கொள்ளப்பட உள்ளன.
நவம்பர் 12 தேதியிட்ட பொது சுகாதாரத் துறையின் இந்த ஆதரவுக் கடிதமானது, தடுப்பூசி விழிப்புணர்வு, தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகள் (IEC) மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பை மட்டுமே வழங்குகிறது. இதனால் அரசுக்கு எவ்வித நிதிப் பொறுப்பும் ஏற்படாது என்பதுடன், 10 லட்சம் சிறுமிகள் என்ற இலக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸின் சொந்த இலக்காகும்; இது தமிழக அரசின் தடுப்பூசி வழங்கும் அல்லது நிதி ஒதுக்கும் உறுதிமொழி அல்ல என்பதும், இக்கடிதம் மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியாகாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போலியோ ஒழிப்புப் பணிகள் மற்றும் கொரோனா காலச் சுகாதாரக் கட்டமைப்பு உதவிகளின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் சமூகப் பணிக்குத் துணை நின்ற தமிழக அரசு, சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.