பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வைத் தரும்! – நடிகர் ஷமன் மித்ரு
‘ஷமன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் ‘தொரட்டி’. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளை பெற்றுள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
‘தொரட்டி’ படத்தில் நடித்த கதாநாயகன் ஷமன் மித்ரு பேசியதாவது,
“விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்தவன் இந்தப்படத்தை இந்து கருணாகரன் சகோதரியோடு தயாரித்துள்ளேன். இப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன்.
மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள். “துரௌபதியை துகில் உரியும் போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். ஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். அப்போது தான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்னாடி வந்த கிருஷ்ணன் தான் இந்தப்படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ். அவர்களுக்கு நன்றி.
இயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்றார்..பயிற்சி என்றால் மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு நான் போனால் என் பின்னால் ஓடிவரும். அந்தளவிற்கு என்னோடு பழகி விட்டது.
நிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப்படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வைத் தரும்.” என்றார்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத ஒளிப்பதிவாளர் பொறுப்பை குமார் ஸ்ரீதர் ஏற்றுள்ளார். எடிட்டிங் ராஜாமுகமது.