புலி படத்தின் தயாரிப்பாளருக்கு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் விருது வழங்கினார்!
விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளரும்,பிரபல இயக்குனருமான பி.டி.செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்க தலைவர் ஆவார். கஜா புயலில் சிக்கி தவித்த ஏழை விவசாயிகளுக்கு டி.ராஜேந்தர் மூலம் ரூபாய் 25 லட்சம் நிவாரண பொருட்கள், வைரமுத்துவை வைத்து ஆயிரத்தெட்டு ஆடுகள், ஜி.வி.பிரகாஷை வைத்து 500 பசுக்கள் கொடுத்து இந்தியாவிலேயே சிறந்த சேவகராக பாராட்டப்பட்டார்.
கொரோனா காலத்தில் ஊரடங்கால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதியுற்ற காலத்தில் தன் உயிரை பற்றியும் கவலை படாமல் துணிச்சலாக 125 நாட்கள் உதவி செய்தவர். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல், வேலையும் இல்லாமல் முடங்கி கிடந்த மக்களுக்கு வீடு தேடி உதவி செய்தவர் பி.டி.செல்வகுமார்.
தோட்ட தொழிலாளர்கள், வீட்டு காவலாளிகள், பணிப்பெண்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள் ஆண்கள், இலங்கை அகதிகள், பர்மா அகதிகள், முடி திருத்துவோர் , விவசாயிகள்,கட்டட தொழிலாளர்கள், பூஜாரிகள், கல் உடைப்போர், நாதஸ்வரம், வில் பாட்டு, மேள கலைஞர்கள், ஊனமுற்றோர், இப்படி பலதரப்பட்டோருக்கும் குறைந்தது தினசரி நூற்றுக்கும் மேலான அரிசி மூட்டைகள் வழங்கி மக்கள் சேவகராக அவதாரம் எடுத்தவர்.
கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுத்து மூலிகை தியான மண்டபத்தை கட்டி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே அதிக உதவியும், மூலிகை மண்டபமும் கட்டிய பி. டி.செல்வகுமாருக்கு மனித நேய செம்மல் (கொரோனா போராளி ) விருது கொடுப்பதில் மனித நல சட்ட மையம் பெருமைபடுகிறது. இவ்வாறு இதன் தலைவர் I.T.அரசன் கூறினார்.
கொரோனா காலத்தில் இவ்வளவு உதவிகளா? திரையுலகில் பல்வேறு சாதனைகள் செய்த பி.டி.செல்வகுமார் கொரோனா காலத்தில் உயிரையும் துச்சமென நினைத்து செய்த உதவிகளை காலம் மறக்காது. அவருக்கு மனிதநேய செம்மல் விருது கொடுப்பதில் நானும் பெருமை படுகிறேன். இவ்வாறு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசினார்.
மனித நேய செம்மல் விருது பெற்ற பி.டி.செல்வகுமாருக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.பி .சௌத்ரி, ஏவிஎம் பாலசுப்ரமணியன், இசையமைப்பாளர் சிற்பி, சுந்தர்.சி.பாபு மற்றும் பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.