அரசியல் கட்சி தொடங்கப்போவது குறித்த முக்கிய அறிவிப்பினை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாக கூறி இருந்த ரஜினிகாந்த், அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால் கட்சி ஆரம்பிக்க இயலவில்லை என கூறி மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டார்.
இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனரோ இல்லையோ, ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க தீவிரமாக பணியாற்றிய ‘காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
இன்று (டிசம்பர் 30) தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை…
“என் கல்லூரி பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வை தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கை பண்புகளும் பாழடைந்து விட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாக சரிந்து விட்டது.
சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்பு வாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும் உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்துக்கு புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்திலும் எந்த நிலையிலும் கையேந்திய தில்லை.
இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும். மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்”
இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டன.
மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றுமில்லை. நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்த கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெற்றுக் கொள்கிறேன். இறப்பு என்னை தழுவும் இறுதி நாள் வரை அரசியலில் மீண்டும் அடி எடுத்து வைக்க மாட்டேன்.
திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன் வரமாட்டேன்.
என்று தமிழருவி மணியன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
![](https://ce.shopinemall.com/wp-content/uploads/2020/12/kmk-446x576.jpg)