இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’ இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,
இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் ஒரு இயக்குநராக நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் .
‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’ ,’நான் சிகப்பு மனிதன்’ , ‘நீதிக்கு தண்டனை’ போன்று எனக்கென்று ஒரு வகையான பாணியில் படங்கள் எடுத்து வந்தேன். ஒரு குடும்பம் ,சென்டிமெண்ட், கிரைம், திரில்லர் இப்படித்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அதில் சட்டம் எப்படி புகுந்து விளையாடுகிறது என்கிற வகையில் படம் எடுப்பேன்.’ சட்டம் சந்திரசேகர்’ என்ற பெயரே எனக்கு இருந்தது .என் மகன் நடிக்க ஆசை பட்டதால் 1992-ல் என் பாணியை மாற்றிக்கொண்டேன்.
‘ரசிகன்’,’ விஷ்ணு ‘ போன்ற படங்களை இளைஞர்களுக்காக எடுத்தேன். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய பழைய பாணியில் சோஷியல் த்ரில்லரை சமூக அக்கறை கொண்ட படமாக எடுத்திருக்கிறேன்.
சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை ,தீயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது.அது கேட்கப் படுகிறதா இல்லையா என்பதுதான் கதை.
நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன், தைரியமாக உண்மையைப் பேசுங்கள். தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன் விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று. விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன் .
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் சிலர் ‘விஜய்யின் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம். பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டி தான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள்’. மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் .பொய் சொல்லாதீர்கள் . தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசாதீர்கள்.
விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் .இதைப் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய் வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி பேசும்போது,
“நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரக்கனி சாரிடம் பேசியபோது நாம் யாருக்காகவும் நம்மை மாற்றிக் கொள்ளக்கூடாது. நாம் நாமாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதை என்னால் மறக்க முடியாது .எஸ்.ஏ.சி. சார் 79 வயதில் 71 படங்கள்முடித்திருப்பது நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது எப்படி இதைச் செய்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
சினிமாவில் நடிகர்கள் நடிக்கலாம் பல படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கலாம். ஆனால் இயக்குவது என்பது பெரிய வேலை .24 டிபார்ட்மெண்ட்களையும் கட்டி மேய்க்க வேண்டிய ஒரு வேலை.அதனால் இதை எப்படிச் செய்தார் என்று என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் எப்போதும் நேரத்தைச் சரியாகப் பார்ப்பவர். காலையில் எழுவதும் சீக்கிரம் படுக்கப் போவதும் அவர் வழக்கம். அதனால்தான் இந்த வயதிலும் அவர் இளைஞராகத் தெரிகிறார்” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.
இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது,
“இந்தப் படம் பற்றிய அனுபவம் பெரிய மறக்கமுடியாத பயணமாக எனக்கு இருந்தது .முதலில் இயக்குநர் எஸ்.ஏ.சி சார் என்னுடன் பேச வேண்டும் என்று நண்பர் கூறிய போது, கொரோனா காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டியதுதானே என்று நான் நினைத்தேன் .ஆனால் அவர் உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்றார் சொன்னால், அங்கேதான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார். அவ்வளவு சுறுசுறுப்பானவர் .அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்துவிட்டார். அவரைப் பார்க்கும்போது கண்டிப்பாக நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும்குணம் தெரிந்தது. அதைப் பார்க்கும்போது என் குருநாதர் பாலச்சந்தர் சார் நினைவில் வந்தார் .
பெரிதாகச் சாதித்தவர்கள் அனைவரும் நேரத்தை மதித்தவர்களாக இருந்திருப்பார்கள். என் குருநாதர் என்னிடம் சொல்வார் எங்கே போனாலும் பத்து நிமிடம் முன்பாகப் போய்ச் சேர். அது உன் வாழ்க்கையை மாற்றும் என்பார். எஸ்.ஏ.சி. சாரிடம் என் குருநாதரைப் பார்க்கிறேன்.இந்தப் படப்பிடிப்பு காலை 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணிவரை கூட நடந்திருக்கிறது .ஆனால் அவர் எப்போதும் சோர்வில்லாமல் உழைத்துக் கொண் இருப்பார் .நான் காலையில் 7 மணிக்குச்செல்லும் போது அதற்கு முன்பே யாரையாவது வைத்துச் சில காட்சிகளை எடுத்து முடித்திருப்பார். அவரது இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு அவர் எப்போது அழைத்தாலும் நான் வருவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
முன்னதாக டீஸரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
படத்தின் ட்ரெய்லரைத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வெளியிடbதயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் இயக்குநர்கள் எம். ராஜேஷ், பொன்ராம்,நடிகைகள் இனியா, சாக்ஷி அகர்வால், குழந்தை நட்சத்திரம் டயானா, நடிகர்கள் அபி சரவணன், யுவன் மயில்சாமி ,தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஒளிப்பதிப்பதிவாளர் மகேஷ் கே.தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.