டாஸ்மாக் மூலம் கல்லா கட்டும் அரசுக்குச் சாட்டையடி! (விமர்சனம்) நல்ல படம்!

Exposing the State’s Greed—Director Prabhuram C Slams Government with a Powerful Social Message!

அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு சாமான்ய மக்களின் வாழ்வோடு விளையாடும் தற்போதைய சூழலில், அரசுக்கு மிகக் கடுமையான சாட்டையடியாகவும், சமூகத்திற்குத் தேவையான ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் பாடமாகவும் திரைக்கு வந்திருக்கிறது ‘நல்ல படம்’.

டாஸ்மாக் பார் நடத்தி வரும் படத்தின் நாயகன் ஹரிஷ், விடியற்காலையில் கடை திறப்பதற்கு முன்பாகவே மது அருந்தத் தொடங்கும் அளவிற்குப் போதைக்கு முற்றிலும் அடிமையான ஒரு குடிகாரராக வலம் வருகிறார். எந்த நேரமும் போதையின் உச்சியிலேயே மிதந்து கொண்டிருக்கும் இவரை, ஒரு மருத்துவம் பயிலும் மாணவியான தனலட்சுமி உயிருக்குயிராகக் காதலிப்பதும், அவரைத் திருத்தப் போராடுவதும் திரைக்கதையின் உணர்வுப்பூர்வமான தொடக்கமாக அமைகிறது.

ஹரிஷ் மட்டுமின்றி, அவரது நண்பர்களும் இந்த மதுப் பழக்கத்தின் பிடியில் இருக்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினரின் கண்ணீரைப் பற்றியோ அல்லது தங்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல், குடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அலையும் இவர்களை திருத்த குடும்பத்தினர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் தான், அந்த அதிரடித் திருப்பம் நிகழ்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவிக்கிறது. இதனால் மது கிடைக்காமல் தவிக்கும் குடிப்பிரியர்கள், தங்களின் போதை வெறியைத் தீர்த்துக்கொள்ளச் சட்டவிரோதமாகத் தாங்களாகவே கள்ளச்சாராயம் தயாரிக்க முற்பட்டு படுதோல்வியைச் சந்திக்கிறார்கள். வேறு வழியின்றி, காலப்போக்கில் அவர்கள் மெல்ல மெல்ல அந்தப் போதையின் பிடியில் இருந்து விடுபட்டு, ஒரு புதிய எதார்த்த வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். மது இல்லாத அந்தப் புதிய வாழ்க்கையால், நீண்ட நாட்களாகத் தொலைந்து போயிருந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் மீண்டும் கிடைக்கிறது.

குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் இத்தருணத்தில், அரசாங்கம் தனது சுயநலப் பொருளாதார லாபத்திற்காக மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிடுகிறது. மதுப்பழக்கத்தை முழுமையாக மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நாயகனும் அவனது நண்பர்களும் இந்தச் சூழலில் என்ன முடிவெடுத்தார்கள், என்பதை எதார்த்தமாக சொல்கிறது இப்படம்.

சமூகப் பொறுப்புணர்வுடன் மக்களுக்கும், மக்களை குடிகாரர்களாக ஆக்கும் அரசுக்கும் நல்ல படம் மூலம் ‘நல்ல பாடம்’ எடுத்துள்ளார்,  கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பிரபுராம் சி. அதற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் ஏ. ஹரிஷ், ஒரு குடிகாரனுக்கே உரிய உடல்மொழியையும் எதார்த்தத்தையும் தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக வரும் தனலட்சுமி, ஒரு மருத்துவ மாணவிக்குரிய முதிர்ச்சியையும், காதலனைத் திருத்தப் போராடும் பெண்ணின் தவிப்பையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

இவர்களுடன் கல்கி, மொட்ட ராஜேந்திரன், ரமா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோரும் நன்றாகவே நடித்துள்ளனர். அமெச்சூர் அட்டெம்ப்ட்டாக இருந்தாலும், படம் எடுத்த நோக்கத்தால் அது மறைந்து போகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் மக்களிடம் மிக வேகமாக அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தை சமுதாயத்தில் இருந்து எப்படி மறக்கடிக்கச் செய்யலாம் என்பதற்கான மிகச் சிறந்த தீர்வையும், அரசு மதுக்கடைகளை முழுமையாக மூடினால் மட்டுமே சாமானிய மக்களை மீட்க முடியும். என்ற எதார்த்தமான உண்மையையும் இயக்குநர் திரைக்கதையில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அரசாங்கமே மதுவை விற்றுவிட்டு, மறுபுறம் மதுவிலக்கு மற்றும் விழிப்புணர்வு பற்றிப் பேசுவது எவ்வளவு பெரிய கண்துடைப்பு என்பதைத் துணிச்சலாகத் தோலுரித்துக் காட்டியுள்ள விதத்தில், ‘நல்ல படம்’ திரைப்படம் நிச்சயமாக மது விற்கும் அரசுக்கான ஒரு மரண அடி என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்தில்லை.