தனித்துவமான மற்றும் ஸ்டைலான திரையாக்கம் மூலம், படத்தின் தரத்தை உயர்த்துவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். “அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களின் வெற்றி மூலம் அவரது கிராஃப் சீராக உயர்ந்து வருகிறது. தேசிய விருது பெற்ற ‘ஷெர்ஷா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்த பிறகு, அவர் இப்போது தனது அடுத்த படத்திற்காக நடிகர் சல்மான் கானுடன் இணைந்துள்ளார். இது அவரின் சினிமா பயணத்தில் அடுத்த மைல்கல். இப்போது, விஷ்ணு வர்தன் மனதைக் கவரும் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார். திரையில் தனது ஹீரோக்களின் வசீகரத்தை மேம்படுத்துவதில் விஷ்ணு வர்தன் பெயர் பெற்றவர். அந்த மேஜிக்கை இப்போது மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளிக்கு கொடுக்க உள்ளார்.
இந்த புதிய படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதற்கு முன்பு இவர் தயாரிப்பில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தமிழில் விஷ்ணு வர்தனின் கம்பேக் படம் அழகான காதல் கதையாக இருக்கும்.
படத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் தவிர சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து முன்பு பணிபுரிந்த படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்போது அந்தக் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஃபெடரிகோ கியூவா ஆக்ஷன் காட்சிகளை இயக்க, அனு வர்தன் ஆடைகளை வடிவமைக்கிறார். தினேஷ் பாடல்களுக்கு நடனம் அமைக்கிறார்.
சேவியர் பிரிட்டோவுடன் சினேகா பிரிட்டோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முத்துராமலிங்கம் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.