இந்து சமயத்தினருக்கு அடிப்படையாக சொல்லப்படும் ரிக், சாம, யஜுர், அதர்வண வேதம் என வேதங்கள் நான்கு. இதன்பிறகு ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தின் ஒரு பகுதியான ‘பகவத் கீதை’ யையும் சொல்லப்படுவதுண்டு. இந்த ‘ஐந்தாம் வேதம்’ இணையத்தொடர் எதை சொல்கிறது? பார்க்கலாம்.
நாயகி சாய்தன்ஷிகா, தனது தாயாரின் விருப்பப்படி அவரது அஸ்தியை காசியில் கரைக்கச் செல்கிறார். அங்கே அவரை மர்மமான சில மனிதர்கள் பின் தொடர்கிறார்கள். இறுதியில் ஒரு பூசாரி, சாய் தன்ஷிகாவை சந்தித்து அவரிடம் ஒரு மர்மமான பெட்டியை கொடுத்து அதை, தென் தமிழகத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்து சிவன் கோவிலில் கொடுக்குமாறு, கட்டளையிடுகிறார். அடுத்த கணமே அமானுஷ்யமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். திகிலில் உறைந்து போகும் சாய் தன்ஷிகா அந்த பெட்டியை அங்கேயே விட்டு விட்டு தனது ஊருக்கு திரும்புகிறார். ஆனால், அந்தப்பெட்டி மீண்டும் அவரிடமே வந்து சேருகிறது. அவரையும் மீறி அவர் செல்ல வேண்டிய ஊருக்கு செல்லாமல் சூழ்நிலை கிராமத்து சிவன் கோவிலுக்கு அழைத்து சென்று விடுகிறது. அவரிடம் இருக்கும் அந்தபெட்டியை இன்னொரு குழு அபகரிக்க முயற்சிக்கிறது. இதன் பிறகு என்ன நடந்த்து? என்பதே ‘ஐந்தாம் வேதம்’ இணையத்தொடரின் மர்மம் நிறைந்த, சுவாரஸ்யமான திரைக்கதை.
சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வேதங்களை மேற்கோள் காட்டி, இன்றைய அதி நவீன ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தினை பிணைத்து, லாஜிக்கினை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காட்சிகளை மர்மமான முறையில் தொகுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார், மர்மத்தொடர்களுக்கு பெயர்பெற்ற இயக்குநர் நாகா.
முதல் இரண்டு தொடர்கள் படப்படப்புடன் பார்க்க வைக்கிறது அதன் பிறகு கொஞ்சம் போர். இருந்தாலும், மர்மத்துடன் தொடரும் திரைக்கதையால் சோரு ஏற்படவில்லை. கடைசி இரண்டு தொடர்கள் குழப்பம் ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் பல செயற்கைத்தனமாக பேசுவதை தவிர்த்திருக்கலாம்.
தொடரின் நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, கிரிஷ் குரூப், ராம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், மேத்தீவ் வர்கீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜனின் ஒளிப்பதிவும், ரேவாவின் பின்னணி இசையும் திகில் ஏற்படுத்துகிறது.
அமானுஷ்யமான மர்மத்தொடரினை விரும்பிப்பார்ப்பவர்கள் ‘ஐந்தாம் வேதம்’ தொடரினை பார்க்கலாம்.