ஆலகாலம் என்பது, இந்து மத புராணங்களில் சொல்லப்பட்ட ஒரு கொடிய விஷமாகும். வாசுகி என்ற பாம்பினை கயிறாகக் கொண்டு, அமுதம் வேண்டி, அசுரர்களும், தேவர்களும் ‘பாற்கடலை’ கடையும் பொழுது, கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பு கக்கிய விஷமாகும். இந்து மதத்தினரை பொருத்த வரை, உலகத்திலிருக்கும் விஷங்களில் இதுவே மிகக்கொடியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை விட கொடிய விஷம் இருக்கிறது. அது தான், டாஸ்மாக் மூலமாக, தமிழ்நாடு அரசால் மூலை மூலைக்கு விற்கப்படும் மது. என்பதை சொல்லியிருக்கிறார், கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும், இயக்குநர் ஜெயகிருஷ்ணா.
கள்ளச்சாராயத்துக்கு கணவனை பறிகொடுத்த இளம் விதவை, ஈஸ்வரி ராவ். இவரது ஒரே மகனை படாத பாடுபட்டு, தன் மகன் ஜெயகிருஷ்ணாவை, சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கிறார். இந்நிலையில் எந்தவிதமான கெட்டபழக்கத்திற்கும் ஆளாகமல் இருக்கும் ஜெயகிருஷ்ணாவின் மீது, உடன் படிக்கும் மானவியான, சாந்தினிக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அது காதலாகிறது. இவர்களது காதல், சாந்தினியை ஒருதலையாக காதலித்து வந்த, அவர்களுடன் படிக்கும் சக மாணவனுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஜெயகிருஷ்ணாவுக்கு, மதுப்பழக்கத்தை கற்றுக்கொடுத்து, அவனது வாழ்க்கையை சீரழிக்கிறார். ஜெயகிருஷ்ணா அந்த சீரழிவிலிருந்து மீண்டாரா, இல்லையா? என்பதே ஆலகாலம்.
தெருவிற்கு தெரு மதுக்கடைகள் மூலமாக மது, தமிழ்நாடு அரசால் விற்கப்பட்டு வருகிறது. இன்றளவில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பலர் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்கள் என்பது, தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. இன்றைய சூழலில், இந்தத் திரைப்படம் அவசியமானதாகும். அதை உணர்வு பூர்வமாக, எளிமையான முறையில், சிறப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குநர், நடிகர் ஜெயகிருஷ்ணா.
முதல் பாதியில், விழுப்புரம் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து படிக்கும் வெள்ளந்தி மாணவர் கதாபாத்திரத்தில், ஜெயகிருஷ்ணா சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவராக, அவர் வெளிப்படுத்திய நடிப்பு சிறப்பு.
ஈகோ இல்லாத தமிழ் நடிகை சாந்தினி, இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடித்ததற்காக பாராட்டலாம். கல்லூரி மாணவியாகவும், குடும்பத் தலைவியாகவும் பொருத்தமாக நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
ஜெயகிருஷ்ணாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், மிக அழுத்தமானது, பரிதாபமானது. தமிழ் நாட்டுத் தாய்மார்களை கண்முன் நிறுத்துகிறார். தன்னுடைய மகன் தன் கண்முன்னே, போதைக்கு அடிமையாகி, உயிருக்குத் துடிக்கும் நிலையில் அவர் எடுக்கும் முடிவு எல்லொரையும் கண்கலங்கச் செய்யும்.
நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என, முதல் படத்திலேயே மூன்று பணிகளை மேற்கொண்டிருக்கும் ஜெயகிருஷ்ணா பாராட்டுக்குரியவர்!
தற்போதைய, இளைஞர்களின் வாழ்க்கை மதுப் பழக்கத்தால் எப்படி சீரழிகிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ஆலகாலத்தினை விட கொடிய விஷம், மது தான்.
‘இளைய புரட்சி’ இயக்குநர் ஜெயகிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!