‘ஒயிட் ரோஸ்’ – விமர்சனம்!

ஒயிட் ரோஸ், இது ஒரு சைக்கோ க்ரைம் த்ரில்லர்! விஜித், கயல் ஆனந்தி தம்பதியினரான இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை. போலீஸ் என்கவுன்டரில் எதேச்சையாக சிக்கி உயிரை உயிரை விடுகிறார், ஆனந்தியின் கணவர் விஜித். கணவரை இழந்த அவருக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படவே, தோழியின் உதவியோடு பாலியல் தொழிலாளியாக மாறுகிறார். பாலியல் தொழிலின் முதல் நாள், பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஆர்கே சுரேஷிடம்,  கயல் ஆனந்தி மாட்டிக்கொள்கிறார். அவரிடமிருந்து ஆனந்தி தப்பித்தாரா, இல்லையா? என்பதே ஒயிட் ரோஸ்.

ஒயிட் ரோஸ் படத்தினை எழுதி, இயக்கியிருக்கும் கே.ராஜசேகர், அபத்தமான திரைக்கதையினை அமைத்திருக்கிறார். கணவனை இழக்கும் கயல் ஆனந்திக்கு, வேறு எந்தவிதமான சேமிப்போ, சொத்துக்களோ இல்லையா?  மேலும், அவர் பொறியியல் படித்த கதாபாத்திரமாக, சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சாயலிலேயே சில படங்களும் வந்துள்ள நிலையில் ரசிகர்களின் கவனத்தினை பெற தவறி விட்டது.

நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்திக்கு கனமான கதாபாத்திரம். அதை லாவகமாக கையாண்டுள்ளார். ஆர்கே சுரேஷிடமிருந்து அவர் தப்பிக்க போராடும் காட்சிகளில், பயத்தையும், பதற்றத்தினையும் ஒரு சேர ரசிகர்களிடம் கடத்திவிடுகிறார்.

சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வசனம் பேசாமல் நடித்து மிரட்டுகிறார்.

இவர்களுடன், கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சசி லயா ஆகியோர் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவும், இசையமைப்பாளர் சுதர்சனும் காட்சிகளுக்கு பலம் சேர்க்க முயற்சித்துள்ளனர்.

க்ளைமாக்ஸில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் அமெச்சுர்த்தனமாக இருக்கிறது!

மொத்தத்தில், ‘ஒயிட்ரோஸ்’ மொட்டவிழாமல் உதிர்ந்துள்ளது!