கூலிப்படை கலாச்சாரத்தை, வாழ்வாதாரப் போர்வையில் நியாயப்படுத்தும் ‘அமரம்’ (விமர்சனம்.)

கிழக்குத் தொடர்ச்சி மலையின் வறண்ட பழங்குடியின கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் நாயகன் ராஜன் தேஜேஷ்வர். வாழ்வாதாரப் பற்றாக்குறையால் தவிக்கும் அவர், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை அவர் கண் முன்னாலேயே கொடூரமாகக் கொலை செய்கிறார். தந்து கண் முன்னே துடிதுடித்து மாண்ட தந்தையின் மரணத்திற்குப் பழிதீர்க்க, அந்தப் பாசக்காரக் கொலையாளியைத் தேடி மலைக் கிராமத்திற்குள் நுழைகிறார் நாயகி. அதன் பிறகு இவர்களுக்குள் அரங்கேறும் உளவியல் மற்றும் ஆயுதப் போரே ‘அமரம்’. அமரம் என்ற சொல்லிற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும், ‘போர்’ என்ற பொருளே இக்கதைக்கு ஓரளவிற்குப் பொருந்துகிறது.

இப்படத்தின் மிகப்பெரிய ஆறுதலே நாயகி ஐரா அகர்வாலின் துடிப்பான நடிப்புதான். தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கும் வெறியோடு தேடி அலைவது, இறுதியில் அவன் கையில் கிடைத்தவுடன் சட்டென்று அவனைக் கொலை செய்ய முடியாமல் தவித்துப் பதறுவது என எமோஷனல் காட்சிகளில்  ஸ்கோர் செய்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

முதல் படத்திலேயே ஒரு மாஸான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் நாயகன் ராஜன் தேஜேஷ்வர், உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாமல் படம் முழுவதும் பெரிதும் தவித்திருக்கிறார். வெறும் தாடியையும், முடியையும் நீளமாக வளர்த்துவிட்டால் மட்டுமே ஒரு அசல் மலைவாழ் பழங்குடியினராக மாறிவிட முடியாது என்பதை அவரது கல்லான முகபாவனைகள் உணர்த்துகின்றன.
பழங்குடியின சமூக மூத்தவராக வரும் ஜார்ஜ் மரியன், பழங்குடி மக்களைக் கூலிப்படையாக மாற்றும் வில்லன் பாத்திரத்தில் வரும் சாய் தீனா, எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் நாகினீடு மற்றும் ஹரிஷ் பெராடி, கல்கி ராஜன், வாசுதேவன் முரளி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான தேர்வாக அமைந்து கதையோட்டத்திற்குத் தேவையான பங்களிப்பை  வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பரத் குமார், கிழக்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களின் கடுமையான வறட்சியான நிலப்பரப்பையும், அங்கு வாழும் மகிழ்ச்சியற்ற ஏழை மக்களின் முகங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர், பின்னணி இசை ஓரளவிற்குத் த்ரில்லர் உணர்வைத் தந்தாலும், இவரால் போடப்பட்டுள்ள பாடல்கள் எதுவும் இப்படத்தின் இருண்ட கதைக்களத்திற்கு ஏற்றபடி அமையாமல், திரைக்கதையின் வேகத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளன.

இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா, இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஒரு விளிம்புநிலைச் சமூக மக்களின் வாழ்வியலைப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்ததற்காகப் பாராட்டலாம்.

ஆனால், அந்த உன்னதமான பின்னணியை வைத்துக்கொண்டு காதல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற தேவையற்ற கமர்சியல் அம்சங்களைக் கையாண்ட விதம் பார்வையாளர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை.மிக முக்கியமாக, பழங்குடியின மக்களுக்கு ஆதரவான கருத்துகளைச் சொல்வதாக நினைத்துக்கொண்டு, அவர்களைத் தவறான கோணத்தில் இழிவுபடுத்தியுள்ளார்.

மலைவாழ் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகச் செம்மரம் வெட்டுபவர்களாக மாறுவதையும், மனிதர்களைக் கூலிக்குக் கொலை செய்யும் கொடூரமான கூலிப்படையினராகச் செயல்படுவதையும் இயக்குநர் தனது திரைக்கதையில் நியாயப்படுத்த முயன்றிருப்பது அபத்தங்களின் உச்சம்.

இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கான ஆபத்தான நியாயப்படுத்தல்களைச் சமூகப் பொறுப்புள்ள எந்தவொரு ரசிகராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் இயக்குநருக்குத் திரையுலக விமர்சகர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.