‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்துல வெளியாகி இருக்குற ‘இருமுடி கட்டு’ படம் ஒரு மரண மாஸான பிளாஷ்பேக் உத்தியோட தான் ஆரம்பிக்குது. படத்தோட ஓப்பனிங் சீன்லயே, “என் செல்ல மகள் தூங்கிட்டு இருக்கா, யாரும் சத்தம் போடக்கூடாது” அப்படின்னு சொல்லி, ரோட்டுல போற வண்டிகளைக்கூட ஹாரன் அடிக்க விடாம ஆள் வச்சு பக்கா பிளான் போட்டு அமைதியா பார்த்துக்குறார் நம்ம ஹீரோ திரிநாத் (ரவி தேஜா).
அப்போ அந்த ஏரியாவுக்குள்ள தெரியாம ஹாரன் அடிச்சுட்டு வர்ற ஒரு லாரி டிரைவரைப் பிடிச்சு தியேட்டரே அதிருுற அளவுக்கு அடிச்சு துவம்சம் செய்றார். “அடேங்கப்பா.. அந்தப் பொண்ணோட தூக்கத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் இருக்கு?” அப்படின்னு ஆடியன்ஸ் யோசிக்குற கேப்ல தான் கதையோட மெயின் பிளாஷ்பேக் காட்சிகள் ஒவ்வொன்னா விரியுது.
கதைப்படி, ஆத்தூர் கிராமத்துல சில ஏக்கர் நிலத்துல வாழை விவசாயம் செஞ்சுட்டு வர்றார் திரிநாத் (ரவி தேஜா). இவருக்கு 24 மணி நேரமும் இடுப்புல செருகிய குவாட்டர் பாட்டிலும், இழுத்துக்கட்டிய லுங்கியும்தான் உலகம். எப்போ பாத்தாலும் ஃபுல் போதையில இருக்குற இவரால, குடிக்காம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ஆனா, அப்படிப்பட்ட மொரட்டு குடிகாரர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டதும், அந்தப் பழக்கத்தை அப்படியே ஓரமா தூக்கி வச்சிடுறார்.
திரிநாத் அவரோட ஒரே மகள் மணிகண்டா (பேபி நட்சத்திரா) மேல தன் உயிரையே வச்சிருக்கார். அவளுக்குச் சின்ன வயசுல இருந்தே சமுதாயத்துல செம்ம தைரியமா வாழணும்னு சொல்லிக் குடுத்து வளர்க்கிறார். முக்கியமா, பொம்பளப் புள்ளைங்க வெளியே சொல்லப் பயப்படுற எந்தவொரு தப்பான விஷயமா இருந்தாலும், அதைத் தைரியமா முதல்ல அப்பாகிட்ட வந்து சொல்லணும்னு ஒரு சூப்பர் மெசேஜோட வளர்க்கிறார். அவரோட மனைவி காவேரியோ (பிரியா பவானி சங்கர்) எதற்கும் பயப்படுற ஒரு சாதுவான கிராமத்துப் பெண்.
இப்படிப்பட்ட சூழல்ல, அந்த ஊர்ல இருக்குற சில பள்ளிப் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை தர்ற சில முகமூடி மிருகங்களைப் பத்தின விபரீத உண்மை, தைரியமா வளர்ந்த மணிகண்டா மூலமா அவங்க அப்பாகிட்ட வருது. இதைக் கேட்டுப் பெற்ற வயிறு பதைபதைக்கும் நம்ம ஹீரோ, அந்தப் பாலியல் குற்றவாளிகளை நோக்கி எப்படி ஆக்ரோஷமா வேட்டையாடுறார்? என்பதுதான் ‘இருமுடி கட்டு’ படத்தோட மீதிக்கதை.
இப்படியொரு செம்ம எமோஷனல் கதையில நம்ம மாஸ் மகாராஜா ரவி தேஜா குடிகாரத் தந்தையா வாழ்ந்திருக்கார்னே சொல்லலாம். எப்போதும் போதையில இருக்குற அந்தப் பாத்திரத்துல கலைந்த தலை, குலைந்த உடை, கிறங்கிய விழிகள், மிரட்டும் கோபம்னு அச்சு அசலா ஒரு நிஜக் குடிகாரனை அப்படியே கண்முன்னாடி நிறுத்துறார்.
‘நூறு சாமி’ திரைப்படத்தில் மிகவும் பாந்தமான கேரக்டரில் வந்து அசத்திய நடிகை ஸ்வாசிகா, இந்தப் படத்தில் அப்படியே 180 டிகிரி மாறி ஒரு வெயிட்டான எதிர்நிலைப் பாத்திரத்தில் (Negative Role) நடித்துப் பார்ப்பவர்களின் ஏகோபித்த எரிச்சலை அப்படியே அள்ளிக் கொள்கிறார். தனக்குக் கிடைத்த வித்தியாசமான நெகட்டிவ் வாய்ப்பில் கச்சிதமாக நின்று ஸ்கோர் செய்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் ஓர் அடக்கமான குடும்பத் தலைவியாக இயல்பாகத் தோன்றி அசத்தியுள்ளார். படத்தோட ரியல் மாஸ் நம்ம பேபி நட்சத்திரா தான். ‘மணிகண்டா’ பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தச் சிறுமி, துறுதுறுப்பான பேசும் விழிகளால் நம் பக்கத்து வீட்டுக் குழந்தை போல உணர வைக்கிறார்.
பகைவர்களையும், பாலியல் கொடுமை செய்யும் முகமூடி மனிதர்களையும் இரண்டாம் பாதியில் ஒவ்வொருவராகக் காட்டும் காட்சிகள் தியேட்டரில் செம்ம அதிர்ச்சி தரும் திருப்பங்கள்! குறிப்பாக, ஆரம்பத்தில் பக்தி வசப்பட்டு நமக்கு மிகவும் அன்பான குருசாமியாகத் தெரிந்த சாய்குமார், பின்னாளில் ஒரு கொலைகாரனாக மாறுவது போலக் காட்டியிருப்பது அந்தப் பாத்திரத்தையே கொலை செய்வதற்குச் சமமாக நமக்கு ஒரு பெரிய உறுத்தலை ஏற்படுத்துகிறது. ஆன்மீகப் பாதையில் பவ்யமாக இருப்பவரே இப்படி நம்ப முடியாத வில்லனாக மாறுவது தர்ம நெறிக்கு உகந்ததல்ல என்று பார்க்கும்போது தோன்றுகிறது. முதல் பாதியில் மிகவும் இயல்பாகச் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் மிகையான செண்டிமெண்ட் மற்றும் அதிர்ச்சி ட்விஸ்ட்டுகளுக்குள் சென்று விடுகிறது.
படத்தின் சில காட்சிகள் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நமக்கு எளிதாக யூகிக்க வைத்தாலும், நம்மைப் பெரிய அளவில் யோசிக்க விடாமல் திரைக்கதையைத் தொய்வில்லாமல் பக்காவாக எடிட் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரவீன் புடி.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, படம் முழுக்கப் பெருந்திரளான கூட்டங்கள் நிறைந்திருக்கும் காட்சிகளை மிகவும் வண்ணமயமாகத் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார். அனல் அரசு மற்றும் ரியல் சதீஷ் மாஸ்டர்களின் வீரியம் மிக்க சண்டைக் காட்சிகளிலும் அவரது கேமரா சுழன்று சுழன்று காட்சிகளை மாஸாகப் பதிவு செய்துள்ளது.
நம்ம ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரு பக்கா கமர்ஷியல் கமர்ஷியல் படத்தை அடுத்த லெவலுக்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன. ஐயப்பன் பாடல்களையும் பக்திரசம் வழிய வழிய, அதே சமயம் துள்ளலோடும் எழுச்சியோடும் அக்மார்க் ஹிட் ரகமாக உருவாக்கியுள்ளார். குறிப்பாக, ‘கட்டு கட்டு இருமுடி கட்டு’, ‘மல்லிப்பூ பல்லக்கில்’, மற்றும் ‘தேவதையே தேவதையே’ போன்ற பாடல்கள் அனைத்தும் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் கேட்கக் கேட்கப் பிடிக்கும் ரகம்!
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தப் படம் ஒரு அக்மார்க் ‘செண்டிமெண்ட் பேக்கேஜ்’ (Sentiment Package) என்றே சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட அதிரடியும் பாசமும் கலந்த மசாலா கலவை ஆந்திரா மற்றும் தெலுங்கானா பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தமிழ்நாட்டு ஆடியன்ஸுக்கு இந்தக் கலவையின் காரம் (ஓவர் செண்டிமெண்ட்) சற்று அதிகமாக உணரப்படலாம்.
இருப்பினும், பக்தியும் பாசமும் சரிவிகிதத்தில் கலந்து நிறைந்துள்ள இந்த ‘இருமுடி கட்டு’ திரைப்படம், குறிப்பாகப் பெண் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும் வகையில் மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது. பெண் குழந்தைகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கும் ஒரு நல்ல சமூக மெசேஜை கமர்ஷியல் பாணியில் சொன்னதற்காக இந்த ‘இருமுடி கட்டு’ படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்!