#AmmaSong to all the Mothers.
ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலி க்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி ‘கணம்’ படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருப்பது சிறப்பம்சம்.
வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’.
அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’,
‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் சர்வானந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கணம்’.
‘அம்மா’ பாடலில் உமா தேவியின் வரிகளுக்கு,
ஜேக்ஸ் பிஜாய் தனது இசையின் மூலம் உயிரோட்டி இருக்கிறார்.
சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் கேட்பவர்களை மயக்கியுள்ளார்.
இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..,
“அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன்.
3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம்.
இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது.
தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா அவர்கள் எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது. முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை.
பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம். ‘மன்னன்’ படத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத…’ ,
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.
பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலியே பலர் மனங்களையும் தாக்கியுள்ளது. இந்தப் பாடலைக் கேட்டவர்களின் உணர்வுகள் குறித்து ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..
அம்மா.. பாடலைக் கேட்டவர்கள் அனைவருமே தனது அம்மாவை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்தார்கள். நிறைய பாராட்டுக்கள் குவிகிறது. அதுவே பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதற்காகத் தான் இந்தப் பாடலை நிறைய நாட்கள் மெனக்கிட்டு உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள ‘அம்மா’ பாடல் சமூக வலைதளத்தில் பலரும் கேட்டுவிட்டு, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். பலரும் ‘கணம்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கணம்’ படத்தில் அமலா அக்கினேனி, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாரித்துள்ளது. தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக வெண்ணிலா கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
இரு மொழிகளில் உருவாகி வரும் ‘கணம்’ – ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.