நான்கு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட அசோக் செல்வன், மணிகண்டன், அபி ஹாசன், பிரவீன் ராஜா ஆகியோரது வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள், அவர்களை எப்படி மாற்றுகிறது என்பது தான், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் கதை.
இப்படத்தில் நடித்துள்ள அசோக் செல்வன், மணிகண்டன், அபி ஹாசன், பிரவீன் ராஜா, நாசர், ரியா, ரித்விகா ஆகியோர் நாம் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்களாகவே மாறிப்போயிருக்கிறார்கள். அவரவர் கதாபாத்திரங்களுக்கு சிறப்பான முறையில் வலு சேர்த்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தமது நடிப்பின் மூலம் ஓரம் கட்டியுள்ளார் நாசர். கதாபாத்திரங்களுக்கேற்ற பொருத்தமான தேர்வின் மூலமாக இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது.
அப்பாவின் மேல் அதிக அக்கறை கொண்டவராக நடித்திருக்கும் அஷோக் செல்வனைப் போல் இருக்கும் பலரும் படம் பார்த்த பிறகு நிச்சயம் திருந்துவார்கள். க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவுவும், மன மாற்றமும் மிகச்சரி.
அறிமுக நடிகர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், சரியான புரிதலின்றி ஆடியோ லாஞ்சில் சிறுபிள்ளைத் தனமாக பேசி மீடியாக்களின் கோரப்பசிக்கு பலியாவது, அவரைப்பற்றிய ட்ரோலின் போதும், அதற்கு பதிலளித்து பேசும் போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். அடுத்தவனை நிர்வாணம் ஆக்கி காயப்படுத்தும் ட்ரோலர்களுக்கு சரியான சவுக்கு அடி!
சாப்ட்வேர் ப்ரொஃபஷனலனராக நடித்திருக்கும் பிரவீன் ராஜா கதாபாத்திரம், கேட்ஜெட்டாக வாங்கி குவிப்பவர்களுக்கு ஊதும் அபாய சங்கு. இன்றைய இளைஞர்களுக்கான மிக முக்கியமான கதாபாத்திரம். இவரது நண்பராக வரும் வழக்கறிஞர் கதாபாத்திரம் அப்படியே அக்மார்க் வழக்கறிஞர். இதில் நடித்திருப்பவர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.
செய்யும் வேலையை சரியாகச் செய்யாமல் புலம்பும் கதாபாத்திரத்தில் மணிகண்டன் சிறப்பாக நடித்திருக்கிறார். மணிகண்டனின் வசனமும் பாராட்டு பெறுகிறது.
நான்கு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கதாபாத்திரங்களை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் விஷால் வெங்கட் கவனம் ஈர்த்துள்ளார். சில இடங்களில் தொய்வு!!
இந்தப்படம் நான்கு மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்களுக்கு நல்ல பாடம்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தலைப்பினை விட ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ என்பது சரியாக இருக்கும்