அக்கார வடிசல், செய்யும் ஒரு ஸ்பெஷலிஸ்ட், பாரம்பரிய முறையில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும்? ஆமாம். இதனுடைய திரைக்கதை வடிவமே, அன்ன பூரணி.
பாரம்பரிய, வைணவ ஆச்சார குடும்பத்தை சேர்ந்த ரங்கராஜன் (அச்யுத் குமார்), திருச்சி, ஶ்ரீரங்கம் மடப்பள்ளியில் தளிகை (சமையல்) செய்து வருபவர். இவரது மகள் அன்ன பூரணி (நயன்தாரா). இவருக்கு, உலகப்புகழ் பெற்ற, இந்தியாவின் தலை சிறந்த சமையல் சூப்பர் ஸ்டார் (ஷெஃப்), சத்யராஜ் மாதிரி ஆக வேண்டும் என்பது ஆசை. அவரது அப்பா, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவே அவருக்கு தெரியாமல், அன்ன பூரணி கல்லூரியில் சேர்ந்து, கேட்டரிங் படிக்கத் துவங்குவதுடன், அசைவத்தை சுவைத்து பார்த்து, சமைக்கவும் செய்கிறார். இது, அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தெரிய வருகிறது. அதனால், மடப்பள்ளியில் ரங்கராஜன் தளிகை செய்யக்கூடாது. என, நிர்வாகம் தடுத்து விடுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? ன்பதே, அன்ன பூரணி படத்தின கதை, திரைக்கதை.
இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா, சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தினை சாதுர்யமாக திரைக்கதைப் படுத்தியிருக்கிறார். அதாவது, அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட, இஸ்லாமியப் பெண் சுரதானியின் (துலுக்க நாச்சியார்), வரலாற்றினை மேற்கோள் காட்டி, பெண்கள் அவர்கள் நினைத்த துறையில் சாதிக்க, எந்த தடையும் இல்லை, என்பதை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் காட்சிப் படுத்தியிருக்கிறார்.
படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே, பாரம்பரியமான வைணவ ஆச்சார குடும்பத்தை சேர்ந்த, ரங்கராஜனின் குடும்பத்திற்குள் நுழைந்து விட்டதை போல், ஒரு உணர்வு ஏற்பட்டு விடுகிறது. தமனின் பின்னணி இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும், காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.
நடிப்பினை பொறுத்தவரை, பழம் பெரும் நடிகை சச்சு அப்படியே கதாபாத்திரத்திற்குள் பொருந்தி விட்டார். அடுத்ததாக அச்யுத் குமார். நயன்தாரா, சத்யராஜ், ஜெய், ரவிகுமார் ஆகியோர் வழக்கம்போல் நடித்திருக்கின்றனர். இவர்களில் ஸ்பெஷலான நடிப்பினை கொடுத்திருக்கிறார், கார்த்திக் குமார். கிடைத்த சில காட்சிகளில் வில்லத்தனத்தினை அட்டகாசமாக காட்டி மிரட்டியிருக்கிறார்.
நடிகர், நடிகைகளுக்கான ஒப்பனை, மேடை நாடக ஒப்பனை போல் இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். பல காட்சிகளில் அக்மார்க் சினிமாத்தனம்! மெதுவாக செல்லும் திரைக்கதை, சுவாரசியமில்லாத காட்சிகள் இவற்றை தவிர்த்து விட்டுப்பார்த்தால், அன்ன பூரணி ஓகே தான்!